தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று (மே 22) குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது. இந்த தாழ்வுப் பகுதி வடகிழக்கு திசையில் நகர்ந்து 24-ம் தேதி தாழ்வு மண்டலாமாக மாறக் கூடும். பின்பு தாழ்வு மண்டலாமானது வடகிழக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் (மே.22,23) கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும்.
துாத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ள நிலையில், மீனவர்கள் (நாளை) வியாழக்கிழமை முதல் தெற்கு வங்கக் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது, அதே நேரம் ஏற்கனவே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருப்பவர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்குள் கரை திரும்புமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
மழை காரணமாக கடந்த வாரங்களில் இருந்த வெப்பம் மற்றும் ஈரப்பதமான சூழலுக்கு பதிலாக கேரளா மற்றும் தமிழகம் அதிக மழையைப் பதிவு செய்துள்ளது. இந்த மாதம், தமிழ்நாடு மற்றும் கேரளாவில் முறையே 90.3 மி.மீ மற்றும் 227.3 மி.மீ (மே 20 வரை) பதிவாகியுள்ளது.
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளைத் தவிர, தெற்கு தீபகற்பத்தில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இந்த மே மாதம் இயல்பான அல்லது அதற்கு மேல் மழை பதிவு செய்துள்ளன என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“