தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்தது குற்றமா? அப்பாவி பெண்ணை அவமானப்படுத்திய கிராம மக்கள்

சாதி, மதம் வேறுபாடுகளால் இந்தியா முழுவதும் பல்வேறு குற்றங்கள் நடந்துகொண்டுதான் வருகிறது. காலம் கடந்து நம் வாழ்க்கையில் எவ்வளவு முன்னேற்றங்கள் வந்தாலும், சாதி மதம் வேறுபாட்டால் நிகழ்த்தப்படும் தீண்டாமை குற்றங்கள் இன்னும் ஒழிந்தபாடில்லை. அறிவியல் துறையிலும், தொழில்நுட்பத்திலும் பல்வேறு வளர்ச்சிகளை நம் நாடு கண்டு வருகிறது, இருப்பினும் தீண்டாமை மட்டும் இன்னும் ஒரு சில இடங்களில் நிலவி வருகிறது.

தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்த மக்களை ஒதுக்கி வைக்கும் பல்வேறு சம்பவங்கள் குறித்து சமீப காலமாக நாம் செய்திகளை படித்து வருகிறோம். சந்தையூர் தீண்டாமை சுவர், கேரளாவில் கொல்லப்பட்ட மது, விழுப்புரத்தில் கோவிலுக்குள் வர பெண்ணுக்கு அனுமதி மறுப்பு போன்ற தீண்டாமை செயல்களையும், அடக்குமுறைகளையும் இன்னும் ஒரு சில கிராமங்கள் விடாப்பிடியாக பின்பற்றி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, திருப்பூர் மாவட்டத்திலும் தீண்டாமை என்னும் துயரத்தை ஒரு அப்பாவி பெண்ணுக்கு நிகழ்த்தியுள்ளார்கள் கிராம மக்கள்.

திருப்பூரில் தாழ்த்தப்பட்ட பெண் மீது கிராம மக்கள் நடத்திய அடக்குமுறை:

திருப்பூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் சமையல் செய்பவராக பணியாற்றி வரும் பெண் ஒருவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் சமையல் செய்யக்கூடாது எனக் கூறி பள்ளியைத் திறக்க விடாமல் கிராம மக்கள் போராட்டம் செய்தனர்.

tiruppur untouchability

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே திருமலைக்கவுண்டம் பாளையத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த பாப்பாள் என்ற பெண் கடந்த திங்கள் கிழமை சத்துணவு திட்டத்தின் கீழ் சமையல் செய்பவராக பணியில் சேர்ந்தார். இந்தத் தகவலை அறிந்த கிராம மக்களில் ஒரு பிரிவினர், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பாப்பாள் சமையல் செய்யக் கூடாது. அவர் செய்யும் சமையலை எங்கள் பிள்ளைகள் சாப்பிடுவதை நாங்கள் ஒப்புக்கொள்ள மாட்டோம் என்று கூறி, பள்ளியைத் திறக்கவிடாமல் பூட்டுப் போட்டனர். பின்னர் முற்றுகை போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்நிலையில் தகவல் அறிந்து வந்த ஊராட்சி ஒன்றிய ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி, பாப்பாளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார். ஆனால் இந்த உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்த பாப்பாள், நான் ஏன் வேறு ஒரு இடத்திற்கு வேலைக்குச் செல்ல வேண்டும், நானும் சக மனிதர் தான். தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்தது குற்றமா? என்று கண்ணீர் விட்டு அழுதுள்ளார். மேலும் கிராம மக்கள் நடத்திய ஒடுக்குமுறையால் பாப்பாள் மனதால் புண்படுத்தப்பட்டுள்ளார். இதையடுத்து அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு புறம் பணியிட மாற்றம் கட்டாயம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தும் கிராம மக்கள், மற்றொரு புறம் இதனை ஏற்க மறுக்கும் பாப்பாள்.

எத்தனை நூற்றாண்டுகள் கடந்து பல தலைமுறைகள் வளர்ந்து வந்தாலும், தீண்டாமை என்னும் கொடிய மிருகத்திற்குத் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் தொடர்ந்து இரையாகிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை. இத்தகைய உயர் சாதி சமூகத்தினரின் ஆதிகத்தை எதிர்த்து தலைமுறை தலைமுறையாக இவர்கள் போராட்டம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Tamilnadu News by following us on Twitter and Facebook

×Close
×Close