சென்னையில் சமையல் கேஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், சில தினங்களில் சிலிண்டர் தட்டுப்பாடு முடிவுக்கு கொண்டு வரப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் சிலிண்டர் புக் செய்து ஒரு வாரத்துக்கு மேலாகியும் புதிய சிலிண்டர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது, இதனால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
தமிழகத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், மக்களுக்கு சமையல் கேஸ் சிலிண்டர்களை விநியோகித்து வருகின்றது. தமிழகத்தில் சமையல் கேஸ் சிலிண்டரின் தேவை அதிகரித்துள்ள நிலையில்,. சென்னைக்கு மட்டும் தினமும் 45 ஆயிரம் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
மேலும் சமீப காலங்களில், பழைய கேஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. ஆனால், பழைய சிலிண்டர்களால் பரவலாக விபத்துகளும் ஏற்பட்டு வந்தது.
இதையடுத்து, பழைய சிலிண்டர்களுக்கு மாற்றாக புதிய கேஸ் சிலிண்டர்களை வாங்கும் முயற்சியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் உள்ளது. இந்நிலையில், புதிய சிலிண்டர்கள் பெறுவதில் திடீர் தாமதம் ஏற்பட்டுள்ளதால், கடந்த சில நாட்களாக கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த திடீர் சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, புதுச்சேரி ஆகியவற்றில் இருந்து சிலிண்டர்கள் வரவழைக்கப்படுகின்றன. மேலும், செங்கல்பட்டு, ஈரோடு, மயிலாடுதுறை, சேலம் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஆலைகளில் இருந்தும் புதிய சிலிண்டர்கள் கொண்டு வரப்படுகின்றன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil