எல்.பி.ஜி டேங்கர் லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தை விலக்கிக் கொள்ளுவதாக உயர்நீதிமன்றத்தில் லாரி உரிமையாளர் உத்தரவாதம் அளித்துள்ளனர். பிரச்சனை தொடர்பாக பேச்சு நடத்த முன்னாள் தலைமை நீதிபதி பால் வசந்தகுமாரை நியமித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த ஏப்ரல் மாதம் மாநில அளவிலான புதிய டெண்டர் நடைமுறை வெளியிட்டது. இதில் எல்.பி.ஜி,டேங்கர் லாரி உரிமையாளர்கள் 5,541 லாரிகளுக்கு ஒப்பந்தம் கோரப்பட்ட நிலையில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் 4,800 லாரிகளுக்கு ஒப்பந்தம் வழங்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், விடுபட்ட 741 லாரிகளுக்கு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஒப்பந்தம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வரும் ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது.
இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் 22 கோடியே 93 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு சமையல் எரிவாயு, பெட்ரோலிய பொருட்கள் கிடைக்காத நிலை உருவாகும் எனக்கூறி, இந்த வேலை நிறுத்த போராட்டத்தை எதிர்த்தும் தடை விதிக்கக் கோரியும் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன், பாரத் பெட்ரோலியம் நிறுவனம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் தனி தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர் .
அதில், டேங்கர் லாரிகளின் வேலை நிறுத்த போராட்டம் அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் படி சட்ட விரோதமானது. எனவே ஜூலை 1 ஆம் தேதி நடைப்பெறவுள்ள வேலை நிறுத்த போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும். எல் பி ஜி கேஸ் நிரப்பும் மையங்கள் உரிய காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தனர்.
இந்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.டி.ஆதிகேசவலு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த போராட்டம் சட்டவிரோதமானது என இதற்கு தடை விதிக்க வேண்டும். மேலும் இந்த போராட்டத்தை ஒட்டி உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என தெரிவித்தார்.
தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் படி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
லாரி உரிமையாளர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இது ஒரு சாதாரண பிரச்சினை இது குறித்து பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காணலாம் எனவும் ஒரு மத்தியாஸ்தர் நியமித்தால் போரட்டத்தை கைவிட தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
அப்போது நீதிபதி நீங்கள் போரட்டத்தை கைவிட்டால் பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தார் நியமிப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து லாரி உரிமையாளர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், எல்.ஜி.பி டேங்கர் லாரி உரிமையாளர் வேலை நிறுத்தத்தை கைவிடுவதாக உத்தரவாதம் அளித்தனர்.
இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதி, வேலை நிறுத்த போரட்டத்தை லாரி உரிமையாளர் கைவிட்டதால் அவர்களின் கோரிக்கை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த மத்தியாஸ்தாராக முன்னாள் ஜம்மு - காஷ்மீர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பால் வசந்தகுமார் நியமிப்பதகவும் அவர் எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் லாரி உரிமையாளர் சங்கத்துடன் பேச்சு நடத்தவும் உத்தரவிட்டர். மேலும் இது தொடர்பான அறிக்கை இரண்டு வாரத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணை இரண்டு வாரத்திற்கு தள்ளிவைத்தார்.