தமிழக ஆளுனர் ஆர்.என். ரவியை வெள்ளிக்கிழமை சந்தித்து பேசிய மூத்த வழக்கறிஞர் கே.எஸ் ராதாகிருஷ்ணன், பிரபாகரன் உயிருடன் இருக்கிறார், விரைவில் வருவார் என கூறினார்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே தேர்வு செய்யப்பட்ட போது திமுகவின் செய்தித் தொடர்பு செயலராக இருந்த கே.எஸ்.ராதாகிருஷ்ணன் சமூக வலைதளப் பக்கங்களில் சில சர்ச்சை கருத்துகளைப் பதிவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து அவர் திமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்தார்.
சமீபத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரான பிரபாகரன் உயிருடன் இருப்பதாக உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்திருந்தார். இது உண்மைதான் என கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கூறினார். தொடர்ந்து பழ.நெடுமாறனை நேரில் சந்தித்து பேசினார்.

இந்நிலையில் சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவனில், தமிழக ஆளுனர் ஆர்.என். ரவியை கே.எஸ். ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழ் இலக்கியம், ஈழத்தமிழர் பிரச்னை, இந்து மகா சமுத்திரம், அரசியல் நிலவரம் குறித்து விவாதித்ததோம். பிரபாகரன் இருந்தபோது நாடாளுமன்றத்தேர்தலில் தமிழர்கள் தான் வெற்றி பெறுவார்கள். இந்த முறை ராஜபக்ச ஆட்கள் வந்துள்ளனர். ஆனால், அவர்களால் ஆட்சி நடத்த முடியாமல் பொதுமக்கள் போராட்டம் நடத்துகின்றனர்.
பழ நெடுமாறன் சொன்னால் நான் சொன்னது மாதிரி. அவரை சொல்லி நாங்கள் அரசியல் செய்யப்போவதில்லை. பிரபாகரான் உயிருடன் இருக்கிறார், விரைவில் வருவார் என ராதாகிருஷ்ணன் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“