LTTE supporters arrested In Malaysia: சமீபத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை பற்றி பேசியது சர்ச்சையான நிலையில், மலேசியாவில் விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் 12 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில், நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. நாங்குநேரியில் பிரசாரம் செய்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ராஜீவ்காந்தியை நாங்கள்தான் புதைத்தோம் என்று பேசியது தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையானது. இதனைத் தொடர்ந்து, சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சர்ச்சையே இன்னும் ஓயாத நிலையில், மலேசியாவில் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்களாக கருதப்பட்டு 12 பேரை அந்நாட்டு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும், மலாக்கா, பினாங்க், செலங்கூர் உள்ளிட்ட பகுதிகளில் கைது செய்யப்பட்டவர்களிடம் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இது மட்டுமில்லாமல், மலேசிய காவல்துறை விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்களாக கருதப்படும் மேலும் 25 பேர்களிடம் விசாரணை செய்து வருகிறது.
விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களாக கருதப்படுபவர்களின் கைது மற்றும் விசாரணை குறித்து மலேசியாவின் பயங்கரவாத தடுப்பு பிரிவான E8 துணை ஆணையர் டத்தோ அயூப் கான், விடுதலைப் புலிகள் தொடர்பான திட்டங்களைச் செயல்படுத்துவதற்கும், அந்த இயக்கத்திற்கு ஆள் சேர்ப்பதற்கும் மலேசியாவில் உள்ள ஆதரவாளர்கள் நிதியைப் பயன்படுத்தியதாக தெரிவித்தார். மேலும், மலேசியாவில் சட்டவிரோதமான சட்டவிரோதமான வகையில் நடைபெறும் எந்த நடவடிக்கையும் மலேசிய போலீசார் அனுமதிக்க மாட்டார்கள் என்று கூறினார். இலங்கை தமிழர்களுக்காக பரிதாபப்படுவது குற்றச்செயல் ஆகாது. ஆனால், விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரிப்பது தவறு. எல்.டி.டி.ஈ பயங்கரவாத அமைப்பு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எதற்காக அந்தக் குழுவை ஆதரிக்க வேண்டும்? என்றும் அயூப் கான் கேள்வி எழுப்பினார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு புத்துயிரூட்டும் நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் மலேசியாவில் ஏராளமான நிதிப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப் பட்டிருப்பதாக மலேசிய காவல்துறை தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த நிதி பரிவர்த்தனைகள் குறித்த விவரங்களை மலேசிய காவல்துறை வெளியிடவில்லை.
இந்த நிலையில், மலேசியாவில் 12 பேர் கைது செய்யப்பட்டது குறித்து விளக்கம் அளித்த மலேசிய பிரதமர் மகாதீர் சட்டத்தின் அடிப்படையில்தான் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதே தவிர யாரையும் பழிவாங்கும் நடவடிக்கை அல்ல என்று கூறியுள்ளார்.
இந்த சூழலில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதும் மலேசியாவில் அந்த இயக்கத்திற்கு புத்துயிரூட்டும் நடவடிக்கைகளுக்கு அவரது ஆதரவு இருப்பதும் தெரியவந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மலேசிய காவல்துறையின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு துணை ஆணையர் டத்தோ அயூப் கான் தெரிவித்துள்ளார். மேலும் அவர், “சீமான் மலேசியாவுக்கு பலமுறை பயணம் செய்து இங்குள்ள அரசியல் தலைவர்களைச் சந்தித்து பேசியுள்ளார். இதனால், சீமானின் மலேசியா வருகை குறித்து விசாரித்து வருகிறோம். புலிகள் ஆதரவு நடவடிக்கைகளில் அவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தால் அவரை மலேசியாவில் நுழைய தடைவிதிக்க வேண்டும் என கேட்போம்” என்று தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப்போரில் விடுதலைப் புலிகளும் அதன் தலைவர்களும் அழிக்கப்பட்டுவிட்டதாக கருதிய நிலையில், மலேசியாவில் விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் என 12 பேர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.