சென்னை வேளச்சேரியில் உள்ள ஃபீனிக்ஸ் மாலில் சசிகலாவுக்கு சொந்தமான ஜாஸ் சினிமாஸின் 11 லக்ஸ் திரையரங்குகளில் வருமான வரித்துறை சோதனை காரணமாக இன்று (சனிக்கிழமை) 3-வது நாளாக காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை, வேளச்சேரி ஃபீனிக்ஸ் மாலில் ஜாஸ் சினிமா நிறுவனத்தின் 11 லக்ஸ் தியேட்டர்கள் அமைந்துள்ளன. இந்த தியேட்டர்களை, சசிகலா 1000 கோடி ரூபாய் கொடுத்து வாங்கிவிட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால், ஜெயலலிதாவோ, சசிகலாவோ இதுகுறித்து பதில் அளிக்கவில்லை. எனவே, இந்த விவகாரம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் வெளியானது.
இதைத் தொடர்ந்து, தியேட்டர்களை நாங்கள் சசிகலாவுக்கு விற்கவில்லை என மால் உரிமையாளர் தெரிவித்தார். ஃபீனிக்ஸ் மாலை உருவாக்கிய கிளாசிக் மால் டெவலப்மெண்ட் நிறுவனம் அளித்த விளக்கத்தில், ‘ஃபீனிக்ஸ் மாலில் உள்ள 11 தியேட்டர்களை 1000 கோடி ரூபாய் கொடுத்து சசிகலா வாங்கியதாக வெளியான தகவலில் உண்மையில்லை. நாங்கள் யாருக்கும் தியேட்டர்களை விற்கவில்லை. ஜாஸ் சினிமாஸ் வாடகை உரிமை அடிப்படையில் தியேட்டர்களை நடத்தி வருகிறது’ என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஜாஸ் சினிமாஸில் கடந்த வியாழக்கிழமை முதல் மூன்றாவது நாளாக இன்றும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக ஜாஸ் சினிமாஸ் திரையரங்குகளில் 3-வது நாளாக காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல், ஜாஸ் சினிமாஸ் இணையத்தளமும் முடக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.