தமிழகத்தில் சென்னை, கோவை நகரங்களில் லுலு மால் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், லுலு மால் வருகையால், சிறு, குறு வணிகர்கள் மற்றும் சாலையோர வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்க்கட்சிகளான அதிமுகவும் பாஜகவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின், மார்ச் மாதம் அரசு முறை பயணமாக துபாய் சென்று, துபாய் எக்ஸ்போ கண்காட்சியில் தமிழக அரங்கத்தை திறந்துவைத்தார். அப்போது, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்க்க பல்வேறு தொழில் நிறுவன நிர்வாக அதிகாரிகளை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்தார். அங்கே, பல்வேறு திட்டங்களுக்கு ஒப்பந்தங்கள் போடப்பட்டது.
அப்போது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லுலு குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் யூசுஃப் அலியை அவருடைய அபுதாபி இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பின்போது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் லுலு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, லுலு நிறுவனம் தமிழ்நாட்டில் 3500 கோடி ரூபாய் முதலீடு செய்யும் என்றும் லுலு குழுமம் 3 திட்டங்களை தொடங்க உள்ளதாக தெரிக்கவிக்கப்பட்டது. இதன் மூலம், தமிழ்நாட்டில் 5000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில், 2,500 கோடி ரூபாய் முதலீட்டில் 2 வணிக வளாகங்கள் திறப்பது 1,000 கோடி ரூபாய் முதலீட்டில் ஒரு ஏற்றுமதி சார்ந்த உணவு பதப்படுத்தும் திட்டம் நிறுவிட லுலு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தப்படி 2024 ஆம் ஆண்டு சென்னையில், முதல் வணிக வளாகம் தொடங்கப்படும் என்றும் கோவை லட்சுமி மில்ஸ் வளாகத்தில் முதல் ஹைப்பர் மார்க்கெட் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் 2 லுலு மால்களை கட்டுவதற்கான திட்டங்களுக்கு எதிர்க்கட்சிகளான அதிமுகவும் பாஜகவும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழ்நாட்டில் லுலு மால்கள் திறக்கப்படுவதால், சிறு வணிகர்களையும் வியாபாரிகளையும் கடுமையாக பாதிப்படுவார்கள் என்று அதிமுகவும் பாஜகவும் கருத்து தெரிவித்துள்ளன. லுலு மால்கள் சாலையோர வியாபாரிகள் மற்றும் சிறு கடை உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும். எனவே, தமிழகத்தில் லுலு மால்களைக் கட்டுவதற்கு அடிக்கல் நாட்ட பாஜக அனுமதிக்காது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் லுலு குழுமத்தின் லுலு மால் திட்டங்களுக்கு தமிழக பாஜக எதிர்ப்பு தெரிவித்தாலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸை சேர்ந்த மிகப்பெரிய சில்லறை வணிக நிறுவனத்தின் 3 மால்கள் பாஜக ஆலும் குஜராத்தில் செயல்பட்டு வருகின்றன. மேலும், கடந்த ஆண்டு டிசம்பரில் ரூ.2000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு குஜராத் அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. பாஜக ஆளும் மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் உள்ள லக்னோவில் லுலு மால் திறக்கப்பட உள்ளது. அக்கட்சி ஆளும் மாநிலங்களில் குழு அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கோவையில் லுலு மால் கட்டுவதற்கு ஒரு செங்கல் வைக்கக்கூட அனுமதிக்க மாட்டோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
லுலு குழுமம் தமிழகத்தில் முதலீடு செய்ய அனுமதித்த விவகாரத்தில் திமுக அரசை எதிர்க்கட்சியான அதிமுக கடுமையாக சாடியுள்ளது. மே 5ஆம் தேதி நடைபெற்ற 39வது தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்கத்தில், பேசிய அதிமுக இணைஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, சிறு தொழில்கள் மற்றும் சிறு வணிகர்களை அதிமுக ஆதரிப்பதாகவும் சிறு தொழில்கள், சிறு வணிகர்கலை அழிக்கும் பெரிய பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக ஒன்றுபட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.