திமுக தலைவர் கருணாநிதிக்கு கவிஞர் வைரமுத்து எழுதியிருக்கும் உணர்ச்சிப்பூர்வமான கவிதை இணையத்தில் வைரலாகி வருகிறது.
அக்கவிதை வரிகள்:
”பிடர்கொண்ட சிங்கமே பேசு
இடர்கொண்ட தமிழர்நாட்டின் இன்னல்கள் தீருதற்கும்
இடைநின்ற பழமைவாதம் பசையற்றுபோவதற்கும்
சுடர்கொண்ட தமிழைக்கொண்டு
சூள்கொண்ட கருத்துரைக்கப்
பிடர்கொண்ட சிங்கமே
நீ பேசுவாய் வாய்திறந்து
யாதொன்றும் கேட்க மாட்டேன்
யாழிசை கேட்க மாட்டேன்
வேதங்கள் கேட்க மாட்டேன்
வேய்ங்குழல் கேட்க மாட்டேன்
தீதொன்று தமிழுக் கென்றால்
தீக்கனல் போலெழும்பும்
கோதற்ற கலைஞரே
நின்குரல் மட்டும் கேட்க வேண்டும்”
வயது முதிர்ச்சி, உடல் நலமின்மை காரணமாக கடந்த ஓராண்டாக தீவிர அரசியலிலிருந்து விலகியுள்ளார் கருணாநிதி. எனினும், அவ்வப்போது அவரது உடல்நலம் தேறிவருவதை உணர்த்தும் வகையில், வீடியோக்கள் இணையத்தளங்களில் வைரலாகும்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முரசொலி அலுவலகம், அறிவாலயம், சிஐடி காலனி இல்லம் ஆகிய இடங்களுக்கு சென்றார் கருணாநிதி. அதேபோல், கோபாலபுரம் இல்லத்து வாசலில் இருந்தபடியே தொண்டர்களுக்கு ஒருமுறை கையசைத்தார். மேலும், தன் கொள்ளுப்பேரனை கண்டு சிரிக்கும் வீடியோவும் இணையத்தில் வைரலானது.
மேலும், கருணாநிதியின் மகன் மு.க.தமிழரசு சமீபத்தில் குடும்பத்தினருடன் தந்தையைக் காண சென்றிருந்தபோது, அவரது பேரன் மகிழன் மட்டையை பிடித்துக்கொண்டிருக்க, கருணாநிதி பந்தை வீசி முகத்தில் சிரிப்புடன் கிரிக்கெட் விளையாடும் வீடியோ வெளியாகியது.