/tamil-ie/media/media_files/uploads/2023/02/Express-Image-5.jpg)
தமிழ்நாட்டில் உள்ள டெல்டா மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள் ஹெக்டர் ஒன்றுக்கு ரூ.20,000 நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 2023 ஜனவரி கடைசி வாரத்திலும், பிப்ரவரி முதல் வாரத்திலும் ஒருசில இடங்களில் பருவம் தவறிய கனமழை பெய்து வந்தது. ஜனவரி 29ம் தேதி அன்று, வங்கக் கடல் மற்றும் அதற்கு அருகில் உள்ள மத்திய இந்திய பெருங்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
இது ஜனவரி 30ம் தேதியன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்று, தமிழ்நாட்டில் டெல்டா மற்றும் இதர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையினால் பாதித்துள்ளது.
அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகள் கனமழையினால் பாதிப்படைந்ததையொட்டி, 22 சதவிகிதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்திட உரிய தளர்வுகளை வழங்கிடுமாறு தமிழ்நாடு முதலமைச்சர், பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று (5.2.2023) கடிதம் மூலம் விவசாயிகள் கேட்டுக் கொண்டுள்ளார்.
கனமழையால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் அதிகாரிகள், அமைச்சர்கள் நேரில் ஆய்வு செய்து, விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகளைச் சந்தித்து பாதிப்பு குறித்தும், அதனைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் கேட்டறிந்தனர்.
இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பயிர் சேத கணக்கெடுப்பு வருவாய்த்துறை மற்றும் வேளாண்மைத்துறையால் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்து பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு இழப்பீடாக, பேரிடர் மேலாண்மை விதிமுறைகளின்படி, 33% மற்றும் அதற்குமேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள இனங்களில் ஹெக்டருக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.