கர்நாடக சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
224 சட்டசபை தொகுதிகளை கொண்டு கர்நாடக மாநிலத்திற்கு கடந்த மே 10-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்பட்ட இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜகவும், ஏற்கனவே கூட்டணியில் ஆட்சி செய்தபோது வீழ்ச்சியை சந்தித்த காங்கிரஸ் கட்சியும் நேருக்கு நேர் மோதியது.
இந்த தேர்தலுக்காக பிரதமர் மோடி சுமார் 8 நாட்கள் கர்நாடகாவில் பிரச்சாரம் மேற்கொண்டார். அதேபோல் காங்கிரஸ் கட்சியிலும் மூத்த தலைவர்கள் பலரும் பிரச்சாரம் மேற்கொண்டதை தொடர்ந்து கடந்த மே 10-ந் தேதி கர்நாடகம் முழுவதும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. எப்போதும் இல்லாமல் இந்த தேர்தலில் அதிகப்படியாக வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டது.
இதனிடையே இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும்பணி இன்று தொடங்கியது. இதில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே மாநிலத்தின் பல்வேறு தொகுதிகளில் முன்னிலை வகித்த காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ஆட்சி அமைக்க 112 தொகுதிகளில் வென்றால் போதும் என்ற நிலையில், காங்கிரஸ் கட்சி அதற்கு அதிகமான தொகுதிகளில் முன்னிலை பெற்றது.
தற்போதுவரை காங்கிரஸ் 114 இடங்களில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில, காங்கிரஸ் கட்சியில் வெற்றியை இந்தியாவில் உள்ள எதிர்கட்சிகள் அனைத்தும் கோலாகலமாக கொண்டாடி வரும் நிலையில், பலரும் காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில்,
கர்நாடகத்தில் மிகச் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு எனது வாழ்த்துகள். கர்நாடக மக்கள் வாக்களித்தபோது, நியாயப்படுத்த முடியாத வகையில் சகோதரர் ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்றத்தில் இருந்து பதவிநீக்கம் செய்தது, நாட்டின் முதன்மைப் புலனாய்வு அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராகத் தவறாகப் பயன்படுத்தியது, இந்தித் திணிப்பு, பெருமளவிலான ஊழல் என அனைத்தும் அவர்கள் மனதில் எதிரொலித்திருக்கிறது.
பா.ஜ.க.வின் பழிவாங்கும் அரசியலுக்குத் தக்க பாடம் புகட்டி அவர்கள் தங்கள் கன்னடிகப் பெருமிதத்தை நிலைநிறுத்தியுள்ளனர். திராவிட நிலப்பரப்பில் இருந்து பா.ஜ.க. முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது. அடுத்து, 2024 பொதுத்தேர்தலிலும் வெல்ல நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம்! இந்தியாவில் மக்களாட்சியையும், அரசியலமைப்பு விழுமியங்களையும் மீட்போம்! என பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“