கோவை மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் ஸ்டாலின் கள ஆய்வு!

கோவை மாவட்ட நிர்வாகிகளுடன் திமுக செயல்தலைவர் ஸ்டாலின், அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை தொடங்கினார். இன்று தொடங்கி 32 நாட்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

கோவை மாவட்ட நிர்வாகிகளுடன் திமுக செயல்தலைவர் ஸ்டாலின், அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை தொடங்கினார். இன்று தொடங்கி 32 நாட்கள் இந்த ஆலோசனை கூட்டம் மாவட்ட வாரியாக நடைபெற உள்ளது.

மாவட்டவாரியாக ஊராட்சி செயலாளர் முதல் மாவட்ட செயலாளர் வரையுள்ள நிர்வாகிகள் மற்றும் திமுகவின் அனைத்து துணை அமைப்புகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்பார்கள் என ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதே போல, இந்த கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள் யாரும் இருக்க மாட்டார்கள். தான் மட்டுமே இருந்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப் போவதாக அறிவித்திருந்தார்.

கள ஆய்வின் முதல் நாளான இன்று கோவை மாநகர் வடக்கு, தெற்கு மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கிய இந்த கூட்டத்தில், பேராசிரியர் அன்பழகன், முதன்மை செயலாளர் துரை முருகன், கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

M.K.Stalin - Kovai 2

கூட்ட அரங்கில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டி

பின்னர் அவர்கள் கிளம்பி சென்றனர். செயல் தலைவர் ஸ்டாலின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின் போது புகார் பெட்டி ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. அதில் நேரடியாக கருத்துச் சொல்ல முடியாதவர்கள் எழுத்து வடிவில் தெரிவிக்கலாம். புகார்களை படிக்க தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அதை படித்து நடவடிக்கை எடுப்பார்கள்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக டெப்பாசிட்டை இழந்தது. இதையடுத்து கட்சி நிர்வாகிகளுக்கும் தலைமைக்கும் இடையே இடைவெளி இருப்பதாக பரவலாக பேசப்பட்டது. இந்த குறையை போக்கவே ஆலோசனை கூட்டத்தை ஸ்டாலின் அறிவித்துள்ளார். கட்சி நிர்வாகிகளாக இருப்பவர்கள் கட்சியினருடன் தொடர்பில்லாமல் இருக்கின்றனர். அதனை சரி செய்யவும் இந்த ஆய்வு கூட்டம் நடத்தப்படுவதாக தெரிகிறது.

அதோடு ரஜினி, கமல் ஆகியோர் அரசியலுக்கு வந்தால், திமுகவுக்கு எந்த வகையான பாதிப்பு இருக்கும். இளைஞர்கள் கட்சிக்கு வருகிறார்களா? அவர்களை வருவதில் என்ன பிரச்சனை இருக்கிறது என்பது உள்பட பல விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்யப்படுவதாக தெரிகிறது.

×Close
×Close