திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், நவம்பர் 7ம் தேதி முதல் மீண்டும் நமக்கு நாமே பயணத்தை எழுச்சி பயணம் என்ற பெயரில் தொடங்க இருக்கிறார்.
கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக நமக்கு நாமே என்ற பெயரில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை பயணம் மேற்கொண்டார். இது கட்சியினரிடையே அவருக்கு மரியாதையை ஏற்படுத்தியது. கட்சி தொண்டர்கள் மட்டுமல்லாது, சாதாரண பொது மக்கள் வரையில் அவர் சாதாரணமாக பழகியது, பொது மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது.
அதன் பின்னர் நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக 89 இடங்கள் பெற்றது. ஸ்டாலின் எதிர்கட்சி தலைவரானார்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் உடல் நல குறைவு காரணமாக மரணம் அடைந்தார். அவர் மறைவுக்குப் பின்னர், இரண்டு முதல்வர்களை தமிழகம் கண்டுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்காக ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரும் படாத பாடு படுகிறார்கள். மத்திய அரசு என்ன சொல்கிறதோ அதை எல்லாம் அப்படியே செய்து தங்கள் பதவியை தக்க வைத்துக் கொள்ள முயல்கிறார்கள் என்று திமுக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
அதிமுகவில் டிடிவி தினகரன் தரப்பு ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை சபாநாயகர் சஸ்பெண்ட் செய்தார். இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில் தமிழக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு ஆயத்தம் ஆகும் பணியில் திமுக தீவிரமாக இருக்கிறது.
இதற்காக 20ம் தேதி கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை திமுக கூட்டியுள்ளது. இந்த கூட்டத்தில், திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், கட்சியை பலப்படுத்தும் வகையில் எழுச்சி பயணம் தொடங்க உள்ளது குறித்து அறிவிக்கப்பட உள்ளது. நவம்பர் 7ம் தேதி, ராயப்பேட்டை ஒய்.எம்.சி. மைதானத்தில் இருந்து எழுச்சி பயணத்தை ஸ்டாலின் மேற்கொள்கிறார். ஒவ்வொரு மாவட்டத்திலும் என்னென்னெ ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்பதை மாவட்ட செயலாளர்களுக்கு விளக்கமாக சொல்லப்பட்டுள்ளது.
இந்த பயணத்தின் போது அனைத்து தரப்பு மக்களையும் ஸ்டாலின் சந்திக்க உள்ளதாக தெரிகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.