பொருளாதாரத்தில் நலிந்தோருக்கு அளிக்கப்பட்ட 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை (நவ.7) தீர்ப்பளித்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழக்குரைஞரும் எம்.பி.யுமான வில்சன், பொன்முடி உள்ளிட்டோருடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.
2019ஆம் ஆண்டு மத்திய அரசு பொருளாதார அடிப்படையில் பொதுப்பிரிவினர் பட்டியலில் உள்ள பல்வேறு சமூகங்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கியது. இந்த இடஒதுக்கீடு கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளுக்கும் பொருந்தும்.
இதற்கு எதிராக பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, அரசியலமைப்பு சட்டப்பிரிவு 103இல் செய்த திருத்தம் அரசியலமைப்பின் அடிப்படைகளுக்கு எதிரானது அல்ல, பொருளாதார அடிப்படையில் நலிந்தோருக்கு அளிக்கப்பட்ட இடஒதுக்கீடு செல்லும் என தீர்ப்பளித்தது.
இந்த 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் 3 நீதிபதிகள் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகவும், 2 நீதிபதிகள் எதிரான மாறுபட்ட தீர்ப்பையும் வழங்கினர்.
இந்த நிலையில், இந்தத் தீர்ப்பு நூற்றாண்டுகால போராட்டத்தில் ஒரு பின்னடைவு என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியிருந்தார்.
மேலும் சட்ட வல்லுநர்களிடம் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அவர் இன்று அமைச்சர் பொன்முடி, திமுக மாநிலங்களவை எம்.பி., வழக்குரைஞர் நெல்சன் ஆகியோருடன் தீவிர ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையை தொடர்ந்து தமிழ்நாடு அரசு அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil