மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா தற்போது வரை ஒப்புதலுக்காக ஆளுநர் ஆர்.என் ரவியிடம் உள்ளது. இதுதொடர்பாக, ஆளுனரை நேரில் சந்தித்தும் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.
இதற்கிடையில், டெல்லியில் தமிழக அனைத்து கட்சி எம்பிக்கள் குழு, குடியரசு தலைவர் மாளிகையில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மனு அளித்தனர்.இதற்கு பதிலளித்த குடியரசு தலைவர் மாளிகை அலுவலகம் மனுவின் நகல் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து, திமுக எம்.பி., டி.ஆர். பாலு தலைமையிலான அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் டெல்லியில் அமித்ஷாவை சந்திக்க முயன்றனர். முதலில் நேரம் ஒதுக்கிய அமித் ஷா, பின்னர் உபி தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்கவுள்ளதால், பார்க்க முடியாது என கூறி சந்திப்பை ஒத்திவைத்தார். இதுவரை, தமிழக எம்.பிக்களை சந்திக்க அமித் ஷா நேரம் ஒதுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதுதொடர்பாக இன்று, சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்த உடன் விதி 110ன் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
அப்போது, "கல்வி என்பது அடிப்படை உரிமை. நுழைவுத் தேர்வுகள் விளிம்பு நிலை மாணவ சமுதாயத்தை பாதிக்கும். 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே கல்லூரி சேர்க்கை அமையவேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது.
எந்தவொரு நுழைவுத்தேர்வு என்றாலும், அது ஏழை, எளிய மாணவர்களை பாதிக்கும். மாநில நிதியில் கட்டப்படும் மருத்துவக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான உரிமையை நீட் தேர்வு பறித்துவிட்டது. நீட் விலக்கு மசோதா ஆளுநரால் இன்னும் குடியரசு தலைவருக்கு அனுப்பப்படவில்லை
நீட் தேர்வு விலக்கு மசோதா பற்றி கடிதம் கொடுக்க மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா இதுவரை நேரம் கொடுக்கவில்லை.
நீட் தேர்வு என்பது கூட்டாட்சி தத்துவத்தை சீர்குலைக்கும் வகையில் உள்ளது. நீட் விலக்கு தொடர்பாக, ஜனவரி 8 ஆம்தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது.
போராட்டத்தின் மூலமே அனைத்து உரிமைகளையும் பெற்றிருப்பதால்,நீட் போராட்டமும் தொடரும். அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும்" என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.