கன்னியாகுமரி ஓகி புயல் நிவாரணம் தொடர்பாக ஆளுனருடன் நடத்திய சந்திப்பு நம்பிக்கை தருகிறது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
கன்னியாகுமரி மாவட்டத்தை கடந்த 30-ம் தேதி ஓகி புயல் தாக்கியது. இதில் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் வாழைகள், தென்னை, ரப்பர் மரங்கள் பரவலாக சாய்ந்தன. கடலுக்கு மீன் பிடிக்க சென்றிருந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் ஓகியில் சிக்கினர். அவர்களில் பெரும்பாலானோர் மீட்கப்பட்டுவிட்டபோதும், 462 மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை என மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான் அறிவித்தார்.
கன்னியாகுமரி ஓகி நிவாரணப் பணிகள் தொடர்பாக இன்று (13-ம் தேதி) தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் ஆளுனர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து பேசினார். ஓகி நிவாரணம் தொடர்பான மனு ஒன்றையும் ஸ்டாலின் வழங்கினார். இந்த சந்திப்பின்போது திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன், திருச்சி சிவா எம்.பி, பத்மநாபபுரம் எம்.எல்.ஏ. மனோதங்கராஜ் உள்ளிட்டோரும் உடன் சென்றனர்.
ஆளுனர் சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ‘ஓகி புயல் பாதிப்பு குறித்து கவர்னரிடம் பேசினோம். கன்னியாகுமரி மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டுகோள் வைத்துள்ளோம். ஓகி புயலால் காணாமல் போன மீனவர்கள் எத்தனை பேர்? மீட்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? உயிரிழந்தவர்கள் எத்தனை பேர்? என்கிற தகவலைக்கூட தமிழக அரசு முறையாக தயார் செய்யவில்லை.
தமிழ்நாடு முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்றுதான் அங்கு சென்றார். அதுவும் பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று, பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காமல், அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் போல ஒரு அரங்கில் சிலரை கூட்டி வைத்து பேசிவிட்டு வந்திருக்கிறார். இந்த அறிவிப்பை அவர் சென்னையில் இருந்துகொண்டே செய்திருக்கலாமே? என மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
தமிழ்நாடு அரசு இதில் செயல்படவே இல்லை. பாதிக்கப்பட்ட ரப்பர், வாழை விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் வழங்கவேண்டும். பக்கத்தில் உள்ள கேரள மாநிலத்தில் நடைபெறுவது போல இல்லாவிட்டாலும், அதில் 10 சதவிகிதம் அளவுக்காவது நிவாரண நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்று கேட்கிறோம்.
ஆளுனர் எங்களது கோரிக்கைகளை கேட்டுக்கொண்டு, பிரதமருக்கு அனுப்பி வைப்பதாக கூறினார். அவருடன் நடந்த சந்திப்பு நம்பிக்கை தருகிறது. நம்பிக்கை வீண் போகாது என நினைக்கிறேன்.’ என்றார் ஸ்டாலின்.