திருச்சி மாநகர காவல் துறையில் பணியாற்றும் காவலர்களின் வசதிக்காக இன்று சுமார் ஒன்பது கோடி மதிப்புள்ள பல்வேறு நலத்திட்டங்களை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொளியில் இன்று திறந்து வைத்தார்.
தமிழக முதலமைச்சரால் இரண்டு காவல் நிலையம் மற்றும் காவலர்கள் குடியிருப்பு கட்டிடங்கள் காணொளி காட்சி மூலம் திறக்கப்பட்டது.
இதில், சிந்தாமணி பகுதியில் ரூ.3,05,72,000/- திட்ட மதிப்பீட்டில் தரைதளத்துடன் கூடிய ஐந்து தளங்களுடன் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தில், முதல் தளத்தில் சட்டம் ஒழுங்கு காவல் நிலையமும், இரண்டாம் தளத்தில் குற்றப்பிரிவு காவல் நிலையமும், மூன்றாம் தளத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையமும், நான்காம் தளத்தில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு மற்றும் காவல் துணை ஆணையர் அலுவலகமும் கட்டப்பட்டுள்ளன.
அதேபோல், பீமநகர் பகுதியில் ரூ. 2,58,89,000/- திட்ட மதிப்பீட்டில் தரைதளத்துடன் கூடிய நான்கு தளங்களுடன் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தில், முதல் தளத்தில் சட்டம் ஒழுங்கு காவல் நிலையமும், இரண்டாம் தளத்தில் குற்றப்பிரிவு காவல் நிலையமும், மூன்றாம் தளத்தில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவும் கட்டப்பட்டுள்ளன.
மேலும், உறையூர் பகுதியில் ரூ. 3,01,51,000/- திட்ட மதிப்பீட்டில் காவலர்கள் முதல் தலைமைக்காவலர்கள் வரை உள்ளவர்களுக்கு 24 தரைதளத்துடன் கூடிய நான்கு தளங்களுடன் 24 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
மேற்படி நிகழ்ச்சியில் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, காவல் துணை ஆணையர்கள், தெற்கு, வடக்கு, காவல்துறை அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழக அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“