சென்னை பல்லாவரத்தில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை பொதுக்கூட்டம் நடந்தது. இந்தப் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், “நாம் ஆட்சிப் பொறுப்புக்கு வருவதற்கு முன்பு எப்படி இருந்தது தமிழ்நாடு. 10 ஆண்டுகாலம் பாழ்பட்டு கிடந்தது.
முதல் 5 ஆண்டு காலம் தன் மீதான வழக்கில் இருந்து தப்பிக்கும் முயற்சியில் இருந்தார் ஜெயலலிதா. சிறைக்கு சென்றார் திரும்பி வந்தார்.
அதன் பின்னர் உடல் நலம் பாதிக்கப்பட்டார். மறைந்து போனார். அதன் பின்னர் பழனிசாமி, பன்னீர் செல்வம் ஆகியோரின் பதவிப் போட்டி, உள்கட்சி பிரச்னையில் தமிழ்நாடு அனைத்து வகையிலும் பின்தங்கியது.
தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடந்தது. ஜெயலலிதாவின் வீட்டிலேயே கொலை, கொள்ளை நடந்தது. குட்கா வியாபாரம் ஏகபோகமாக இருந்தது. அப்போது அமைச்சர்கள் மீதும் புகார் எழுந்தது. ரெய்டு நடந்தது.
அனைத்தும் மேலாக மாநில உரிமைகள் பறிக்கப்பட்டன. விடியல் பிறக்காதா? தி.மு.க. ஆட்சிக்கு மீண்டும் வராதா? என்ற மக்களின் தாகம் தீர்க்க மீண்டும் திமுக ஆட்சி வந்தது.
இந்த 2 ஆண்டுகாலத்தில் 10 ஆண்டு பிரச்னையை சரிசெய்துள்ளோம். 2 ஆண்டுகளில் 5 ஆண்டு சாதனையை செய்துள்ளோம்” என்றார்.
தொடர்ந்து ஆளுனர் ஆர்.என். ரவி தொடர்பாக பேசுகையில், “தமிழகத்தின் அமைதியை குலைக்க வந்தாரா எனக் கேள்வியெழுப்பினார்.
தொடர்ந்து, “சனாதனத்தை காலாவதியாக்கியது திராவிடம்” எனவும் பெருமிதம் தெரிவித்தார். மேலும், “பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்கள் பற்றி எரிகிறதே, அதுபோல் எரிகிறதா தமிழ்நாடு” என்றும் பேசினார்.
முன்னதாக, மு.க. ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில் நடந்த கள்ளக்குறிச்சி வன்முறை உள்ளிட்ட பிரச்னைகளை சுட்டிக் காட்டிய ஆளுனர் ஆர்.என். ரவி, திராவிடம் காலாவதி ஆகிவிட்டது எனத் தெரிவித்திருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“