தமிழகத்தின் அடுத்த முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் தான் வருவார் என்று நித்தியானந்தா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நித்தியானந்தா கைலாசா என்ற தனி நாடை உருவாக்கியுள்ளதாகவும், இந்து மதத்தினர் யார் வேண்டுமானாலும் இந்த நாட்டில் குடியேறலாம் என்று நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக நித்தியானந்தா குறித்த தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், கைலாசா நாடு குறித்த தகவல்கள் கூகுள் சர்ச் இஞ்ஜினில் கூட கிடைப்பதில்லை என்பது நிதர்சனம்.
இந்நிலையில், நித்தியானந்தா இருக்கும் இடம் குறித்த தகவலை வரும் 12ம் தேதிக்குள் கண்டுபிடிக்க வேண்டும் என்று போலீசாருக்கு, கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர்கள் தொடர்ந்து விசாரணை என்ற பெயரில் கையை பிசைந்து வரும் நிலையில், நித்தியானந்தா மட்டும் யூடியூபில் அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
நித்யானந்தா தனது வீடியோவில், எனது சீடர்கள் என்னை நினைத்து பரணி தீபத்தை கையில் ஏந்தியபடி ஆசிரமத்தைச் சுற்றி வருகிறார்கள். உண்மையான கைலாசத்தை நான் உருவாக்குகிறேன். எனது உடலைப் பயன்படுத்தி பரமசிவன் இவ்வுலகில் கைலாசத்தை உருவாக்குகிறார்.
E-ஸ்ரீகைலாசா திட்டத்தை தொடங்கியுள்ளோம். இது ஒரு நாட்டின் குடியுரிமை அல்ல. எல்லைகள் அற்ற ஆன்மிக பெருவெளி. கைலாசாவிற்கு மக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. உங்கள் செல்லப் பிராணிகளையும் கைலாசாவில் இணைக்கலாம். அவற்றிற்கு சிறப்பு பரிசுகள் காத்திருக்கின்றன. ஒவ்வொரு முறை நம் மீது பழி சுமத்தப்படும் போதும் நாம் நேர்மையானவர்கள் என்பதை நிரூபித்து காட்டுகிறோம்.
இந்த வீடியோவில் உச்சக்கட்ட பரபரப்பாக, 2021 ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல்வராக, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வருவார் என நித்தியானந்தா தெரிவித்துள்ளார். மீனாட்சி நினைத்தால் இது நடக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அப்படி நடக்கும் நிலையில் , கைலாசா அருகில் ஒரு தீவை அளிக்க உள்ளதாகவும் நித்யானந்தா தெரிவித்துள்ளார். சிவபெருமான் இதற்கு இசைவு தெரிவித்து, காலபைரவர் அதற்கு அனுமதி தருவதுடன் மீனாட்சியின் அருளும் தேவை என்றும், 2021-ஆம் ஆண்டு பெரும்பான்மை இல்லாவிட்டாலும், மு.க. ஸ்டாலின் நிச்சயமாக முதலமைச்சராக வருவார் என தாம் நம்புவதாகவும் நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.
ஆன்மீகம், கர்நாடக போலிசார் என பரபரப்பை ஏற்படுத்தி வந்த நித்தியானந்தா, தற்போது, தமிழக அரசியலிலும் பெரும்புயலை கிளப்ப திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.