‘சென்னையில் சிஐடி காலனி அருகே மேம்பாலத்தின் கீழே இரவு ஒன்றரை மணிக்கு நான் தலைவர் கலைஞரைப் பார்த்தேன்’-தன்னை சந்திக்கிற நெருக்கமான நண்பர்களிடம் இப்படித்தான் சொல்கிறார், காசிராஜன்!
இதை கேட்கிற யாரும் ஒரு நிமிடம் திகில் அடைவது நிச்சயம்! ஆனால் விஷயம் சுவாரசியமானது! மேற்படி திகில் வாக்கியத்தை சொல்கிற காசிராஜன், சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றுகிற ஒரு வழக்கறிஞர்! சென்னை அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி மாணவரணியின் முன்னாள் செயலாளர்! திருநெல்வேலி மேற்கு மாவட்ட திமுக நிகழ்வுகளில் இடம்பெற்று பணியாற்றி வருபவர்!
சரி, கருணாநிதியைக் கண்டதாக இவர் எப்படிச் சொல்கிறார்? அக்டோபர் 11-ம் தேதி தனது முகநூல் பக்கத்திலேயே அதை விவரிக்கிறார், காசிராஜன். அவரது பதிவு இங்கே:
‘தலைவர் கலைஞர் அவர்களை அக்கா கனிமொழியின் உருவத்தில் பார்க்கிறோம் என்று பலர் சொல்வர். நேற்று இரவு அதையும் நான் உணர்ந்தேன்.
நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் அக்கா இல்லத்தின் அருகே ஒரு தம்பியின் பார்கவுன்சில் பதிவு செய்யும் நிகழ்வு மற்றும் ஆளும் அரசுக்கு நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களின் எதிர்ப்பைக் காட்டும் போஸ்டர்களை என் தம்பிகள் ஒட்டிக் கொண்டிருந்தனர். நான் வண்டியின் மீது அமர்ந்திருந்தேன்.
திடீரென ஒரு காரில் அக்கா கனிமொழி சென்றதை நாங்கள் பார்த்தோம். திடீரென அந்த கார் திரும்பி என்னை நோக்கி வந்தது. அக்கா ஜன்னலை திறந்து, ‘என்ன பண்ணுற இந்த நேரத்தில்?’ என்று விசாரித்து பேசிக்கொண்டிருந்தார். நான் கூறினேன், ‘தம்பி நிகழ்வுக்கான சுவரொட்டி மற்றும் கண்டன போஸ்டரை’ பற்றி கூறினேன். உடனே தம்பிக்கு வாழ்த்து கூறி மகிழ்ச்சியாக பேசிவிட்டு, ‘சீக்கிரமா தூங்கு, உடம்பைக் கெடுத்துக்காத’ என்று கூறி ஐந்து நிமிடம் பேசிவிட்டு நகர்ந்தார்.
ஒரு தலைமை என்பதும், கழகம் என்பதும் குடும்பம் போன்றது. நீங்கள் எங்கள் மீது வைத்துள்ள பாசத்தை அந்த நள்ளிரவில் உணர்ந்தேன். நேற்று நான் உங்களை தலைவர் கலைஞராக பார்த்தேன். காலங்கள் கடந்தாலும் எங்கள் பயணம் மாறாது, என்றும் உங்களோடு அக்கா! இப்படிக்கு ச.காசிராஜன் பிஏபிஎல் , மு.சென்னை அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி மாணவரனி செயலாளர் திமுக , நெல்லை மேற்கு மாவட்ட திமுக.’ என பதிவு செய்திருக்கிறார் காசிராஜன்.
திமுக தொண்டர்கள் மத்தியில் இவரது பதிவு வைரலாக பரவி வருகிறது.