முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதி சிலை திறப்பு விழா ஆகஸ்ட் 7-ம் தேதி நடக்கிறது. முரசொலி அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் சிலையை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியை இடதுசாரி தலைவர்கள் தவிர்ப்பதாக தெரிய வந்திருக்கிறது.
திமுக தலைவர் மறைந்த மு.கருணாநிதியின் ஓராண்டு நினைவு தினத்தையொட்டி அவரது உருவச் சிலை, சென்னையில் முரசொலி அலுவலகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சிலை ஆகஸ்ட் 7-ம் தேதி திறந்து வைக்கப்படுகிறது. அன்று மாலை 5 மணிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துகொண்டு சிலையை திறந்து வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சிக்கு தென் மாநில முதல்வர்கள் அனைவரையும் அழைக்க திமுக முடிவு செய்திருந்தது. ஆனால் கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தள ஆட்சி கவிழ்ந்ததால், அங்கிருந்து யாரையும் அழைக்க முடியவில்லை. ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் அறிவாலயத்தில் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் சோனியா, ராகுல் ஆகியோருடன் சந்திரபாபு நாயுடு, பினராயி விஜயன், நாராயணசாமி என தென் மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் கட்சி தலைமைச் சிக்கலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் அந்தக் கட்சியின் மேலிடப் பிரமுகர்கள் யாரையும் அழைக்க வழியில்லை. ஜெகன் மோகன் ரெட்டி ஓரளவு பாஜக.வுக்கு அனுசரணையாக இருப்பதால் அவரை அழைக்க திமுக விரும்பவில்லை எனத் தெரிகிறது. அதேசமயம் மம்தா பங்கேற்பதால், இடதுசாரிகள் இந்த நிகழ்வை தவிர்ப்பதாக தகவல்கள் வருகின்றன.
முரசொலி அலுவலகத்தில் ஆகஸ்ட் 7-ம் தேதி மாலை நடைபெறும் சிலை திறப்பைத் தொடர்ந்து, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த நிகழ்வில் மு.க.ஸ்டாலின் வரவேற்புரையாற்றுகிறார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமை தாங்குகிறார்.
மம்தா பானர்ஜி, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, புதுவை முதல்வர் நாராயணசாமி, கவிஞர் வைரமுத்து ஆகியோர் சிறப்புரை ஆற்றுகிறார்கள். முரசொலி ஆசிரியர் முரசொலி செல்வம் நன்றி கூறுகிறார். இந்த நிகழ்ச்சி நிரல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆகஸ்ட் 5 வேலூர் வாக்குப் பதிவு முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை ஆகஸ்ட் 9-ம் தேதிதான் நடக்கிறது. அதற்கு இடையில் இந்த விழாவுக்கு திமுக.வினர் திரள இருக்கிறார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.