Advertisment

என் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்திய முக்கியமான ஊர் மதுரை: மாமதுரை விழாவில் ஸ்டாலின் பெருமிதம்

என்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய தி.மு.க. இளைஞரணி தொடங்கப்பட்டதும் இந்த மதுரை மண்ணில் இருந்துதான்.

author-image
WebDesk
New Update
MK Stalin

CM MK Stalin

என் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்திய திமுக இளைஞரணி மாநாடு நடைபெற்ற முக்கியமான ஊர் மதுரை என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார்.

Advertisment

மதுரை தமுக்கம் மைதானத்தில் இன்று மாமதுரை விழா தொடங்கியது.

முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக இந்த விழாவை தொடங்கி வைத்து பேசுகையில், ‘மதுரை மாநகர் என்பது பல்வேறு வரலாற்றுப் பெருமைகளைக் கொண்டது என்று நான் அதிகம் விளக்கத் தேவையில்லை.

இந்தியாவின் பழமையான நகரங்களில் ஒன்று மதுரை, 2 ஆயிரம் ஆண்டு வரலாறு கொண்டது, பாண்டிய மன்னர்கள் தலைநகராக ஆட்சி செய்த நகரம், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியப் பாண்டியன் ஆட்சி செய்த நகரம்.

தவறு செய்தவன் மன்னனே ஆனாலும்மன்னனைக் கண்ணகி கேள்வி கேட்ட மண் இது. நீதியைக் காக்க தன்னுடைய உயிரையே தந்த மன்னர் ஆட்சி செய்த இடம் இது. திருமலை நாயக்கரும், ராணி மங்கம்மாளும் ஆண்ட பூமி இது.

புகழ்பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் இருக்கும் கோயில் நகரம் இது.

அனைத்துக் கலைகளும் ஒருங்கே இருக்கும் பண்பாட்டுச் சின்னமாக இந்தக் கோவில் கருதப்படுகிறது. புகழ்பெற்ற சித்திரைத் திருவிழா, மாபெரும் பண்பாட்டு விழாவாக நடைபெற்று வருகிறது.

1866-ஆம் ஆண்டே நகராட்சியாக ஆன ஊர் இது. சென்னைக்கு அடுத்ததாக இரண்டாவது மாநகராட்சியாக 1971-ஆம் ஆண்டு மதுரையைதான் மாநகராட்சி ஆக்கினார் அன்றைய முதல்வர் கலைஞர். அண்ணல் காந்தி அவர்கள் தன்னை அரையாடை மனிதராக மாற்றிக்கொண்ட இடமும் இந்த மதுரை தான்.

என்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய தி.மு.க. இளைஞரணி தொடங்கப்பட்டதும் இந்த மதுரை மண்ணில் இருந்துதான். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

2013-ஆம் ஆண்டு முதல் மா மதுரை போற்றுவோம்விழா நடந்துக்கொண்டு இருக்கிறது. சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளரும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன் அவர்களின் முயற்சியால் இது தொடங்கப்பட்டது.

சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்ட இந்திர விழாபோல இவை நடத்தப்படுவதை அறிந்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். இதேபோல், இந்த ஆண்டும் மாமதுரை போற்றும் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

மதுரை நகரத்தின் மரபையும், பண்பாட்டையும் கொண்டாடும் பெருவிழாவாக இதை நடத்திக்கொண்டு வருகிறீர்கள்.

ஊரைப் பாதுகாக்க வேண்டும். அதன் பழமை மாறாமல் பாதுகாக்க வேண்டும். அதே நேரத்தில் நவீன வசதிகள் எல்லாவற்றையும் ஏற்படுத்தியும் தர வேண்டும். பழமைக்கு பழமையாக, புதுமைக்கு புதுமையாக இளைஞர்கள் இயங்க வேண்டும். பொழுதுபோக்கு விழாவாக இல்லாமல், பண்பாட்டுத் திருவிழாவாக இதை நீங்கள் நடத்திக்கொண்டு வருவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

தமிழ் மொழி, தமிழ் இனம் என்ற பெருமையும் பெருமிதமும் உள்ளவர்களாக எதிர்காலத் தலைமுறை வளர வேண்டும். இது போன்ற விழாக்கள் கூட்டுறவு எண்ணத்தையும், ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என்ற உணர்வையும் உருவாக்கும். சாதி, மத வேறுபாடுகளுக்கு இடமளிக்காமல், இதுபோன்ற பண்பாட்டு விழாக்களை எல்லோரும் கொண்டாட வேண்டும்.

மனிதநேயம் போற்றுவோம்! மக்கள் ஒற்றுமை போற்றுவோம்! என்ற அடிப்படையில் இது போன்ற விழாக்கள் மாநிலம் முழுவதும் நடைபெற வேண்டும் என்று ஸ்டாலின் அந்த வீடியோவில் பேசினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment