அமைச்சர் செந்தில் பாலாஜியை அனைத்துத் துறை மருத்துவ நிபுணர்களும் ஆய்வு செய்து வருவதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் மழைக்கால காய்ச்சல் சிறப்பு முகாம்களை இன்று தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை குறித்து விளக்கம் அளித்தார்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தலைவலி, கால்வலி உள்ளிட்ட பிரச்சனைகள் இருந்தது. நிறைய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு துறை மருத்துவ நிபுணர்களும் செந்தில் பாலாஜியை ஆய்வு செய்து வருகின்றனர். கால் மரத்துபோதல் பிரச்சனை இருப்பதால் அவருக்கு பிஸியோதெரபி சிகிச்சையும் வழங்கப்பட்டு வருகிறது. செந்தில் பாலாஜி எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பது குறித்து மருத்துவர்கள் முடிவெடுப்பார்கள். இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அமைச்சர் பாலாஜிக்கு நவம்பர் 14 ஆம் தேதி இரவு முதல் உடல்நலக் கோளாறு ஏற்பட்டது. இதனால் செந்தில் பாலாஜி நவம்பர் 16 ஆம் தேதி ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சில நாட்களுக்கு முன்னர் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், செந்தில் பாலாஜிக்கு நடந்தாலே மயக்கம் வருகிறது. மன அழுத்தம் காரணமாக பல உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள் என்று கூறியிருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“