மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோதாமேடு பகுதியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மழைக் கால சிறப்பு மருத்துவ முகாமினை இன்று (டிச.9) தொடங்கி வைத்து ஆய்வு செய்தார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் தொடர்ச்சியாக மருத்துவ முகாம் நடத்தப்படும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களை சந்தித்தோம். மக்கள் முகத்தில் கோபம் தெரியவில்லை. இன்று ஒரு நாள் என்னோடு இருங்கள் மக்கள் யாரேனும் கோபத்தோடு பேசினால் சொல்லுங்கள்" என்றார்.
தொடர்ந்து, "ஒரு சில இடங்களில் என்ன நடக்கிறது என்றால், பெண்களை கோபமாக பேச சொல்லி அ.தி.மு.க அல்லது வேறு கட்சியை சேர்ந்தவர்கள் மொபைல் போனில் வீடியோ எடுக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் மக்களை தூண்டிவிட்டு வீடியோவாக வெளியிடுகிறார்கள். அதை சமூக வலைதளங்களில் பரப்புகிறார்கள். இதுபற்றி கவலை இல்லை. உண்மையான விமர்சனங்கள் அதை ஏற்றி சரி செய்யப்படும்.
3 நாளில் 18 செ.மீ மழை பெய்தது அப்போது எங்கும் மழை தேங்கவில்லை. ஆனால் இப்போது டிச.4,5,6 தேதிகளில் மட்டும் 140 ஆண்டுகளுக்கு முன்னால் பெய்த பெருமழை இப்போது பெய்துள்ளது என வானிலை மையமே கூறியுள்ளது. இந்த நாட்களில் மட்டும் இயல்பை விட 10-12 மடங்கு கூடுதலாக மழை பெய்துள்ளது. விமர்சனங்களை சரியாக வைக்க வேண்டும்.
மாநகராட்சி பணியாளர்களின் மனநிலை அறிந்து பேச வேண்டும். எதிர்க்கட்சிகளை சேர்ந்த யாருமே இதை அரசியலாக்க வேண்டாம். சென்னை வடிகால் பணிகளுக்காக ரூ.4,000 கோடி செலவு செய்தது குறித்து கேள்வி எழுப்புகிறார்கள். இது குறித்து விவாதிக்க தயார். எடப்பாடி பழனிசாமியாக இருந்தாலும் யாராக இருந்தாலும் விவாதிக்க தயார்" என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“