மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டாவை, மா. சுப்பிரமணியன் நேற்று (மார்ச் 4) சந்தித்து பேசினார். அப்போது, நீட் தேர்வு விலக்கு, கோவையில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை, மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் மாணவர் சேர்க்கை கொள்கை உள்ளிட்ட தமிழக சுகாதாரத் துறை தொடர்பான முக்கியப் பிரச்சனைகள் குறித்த மனுவை நட்டாவிடம் சமர்ப்பித்தார்.
இந்த சந்திப்பின் போது மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கொள்கை மற்றும் நீட் தேர்வு விலக்கு குறித்து ஜே.பி. நட்டாவுடன், மா. சுப்பிரமணியன் ஆலோசனை நடத்தினார். மேலும், கோவையில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனையையும், தமிழகத்தின் 6 மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளையும் நிறுவ கோரிக்கை வைத்தார். மாநிலத்தில் 24 நகர்ப்புற மற்றும் 26 கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும், 500 சுகாதார துணை மையங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
இது தவிர தமிழகத்தில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை ரூ. 447.94 கோடி மதிப்பீட்டில் வலுப்படுத்தவும் மா. சுப்பிரமணியன் தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. நரம்பியல் அறுவை சிகிச்சை துறைகளை மேம்படுத்தவும், 22 மூன்றாம் நிலை பராமரிப்பு நிறுவனங்களில் உருவகப்படுத்துதல் மற்றும் திறன் ஆய்வகங்களை நிறுவவும் தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இதற்காக ரூ. 603.45 கோடி மதிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.