Advertisment

5.09 லட்சம் வீடுகள் கட்ட மத்திய அரசு ஒதுக்கிய நிதியில் அ.தி.மு.க ஆட்சியில் முறைகேடு – அமைச்சர் மா.சு

3 ஆண்டுகளில் 907 டெண்டர்கள் கோரப்பட்டதில் ஒரே ஐ.பி முகவரியில் ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளன. எடப்பாடி பழனிசாமி மற்றும் அவருக்கு வேண்டியவர்களுக்கு டெண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன – அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு

author-image
WebDesk
New Update
minister m subramanian

மா சுப்பிரமணியன்

அ.தி.மு.க ஆட்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பல்வேறு பெயர்களில் செய்த மெகா ஊழலை சி.ஏ.ஜி அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

Advertisment

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் இன்று (ஏப்ரல் 25) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சி.ஏ.ஜி அறிக்கையின் அடிப்படையில் முந்தைய அ.தி.மு.க அரசை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடுமையாக விமர்சனம் செய்தார்.

இதையும் படியுங்கள்: பி.டி.ஆர் 2-வது ஆடியோ சர்ச்சை: சி.பி.ஐ விசாரிக்க அ.தி.மு.க மனு

அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்ததாவது, எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் டெண்டர் விதி காற்றில் பறக்கவிடப்பட்டது சி.ஏ.ஜி அறிக்கையின் மூலம் அம்பலமாகி உள்ளது. 2016 முதல் 2021 வரையிலான அ.தி.மு.க ஆட்சியில் முறைகேடுகள் தலைவிரித்தாடியது அம்பலமாகி உள்ளது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் கணினிகள் மூலமே ஒப்பந்ததாரர்கள் டெண்டர் எடுத்துள்ளனர். ஒரே கணினி, ஒரே ஐ.பி முகவரி மூலமே டெண்டருக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

3 ஆண்டுகளில் 907 டெண்டர்கள் கோரப்பட்டதில் ஒரே ஐ.பி முகவரியில் ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளன. எடப்பாடி பழனிசாமி மற்றும் அவருக்கு வேண்டியவர்களுக்கு டெண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. வெவ்வேறு நபர்களைப்போல் காட்டிக்கொண்டு ஒரே நபருக்கு டெண்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கலெக்சன், கமிஷன், கரப்ஷன் என்ற அடிப்படையிலேயே அ.தி.மு.க ஆட்சி நடந்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமிக்கு வேண்டப்பட்ட செய்யாதுரை வீட்டில் இருந்து பல கோடி பணம், நகையை வருமான வரித்துறை பறிமுதல் செய்தது.

அ.தி.மு.க ஆட்சியில் நெடுஞ்சாலை துறையில் 2019-2021 வரை 57 கணினிகளை பயன்படுத்தி 80க்கும் மேற்பட்ட டெண்டர்கள் போடப்பட்டுள்ளன. எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியில் ஊழல் எப்படி தலைவிரித்து ஆடியது என்பதை சி.ஏ.ஜி தணிக்கை அறிக்கை விளக்கியுள்ளது. அ.தி.மு.க ஆட்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பல்வேறு பெயர்களில் செய்த மெகா ஊழலை சி.ஏ.ஜி அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க ஆட்சியில் மதுரை திருமங்கலத்தில் சாலைகள் சீரமைக்க நிதி ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளது. பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் விளம்பரம் வெளியிட்டதில் ரூ.2.18 கோடி முறைகேடு நடந்துள்ளது. பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் சமூகநீதியை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு சிதைத்துள்ளது. பழங்குடியினருக்கான 60 சதவீத வீடுகள் அந்த மக்களை சென்றடையவில்லை என சி.ஏ.ஜி அறிக்கை தெரிவித்துள்ளது. பட்டியலின மக்களுக்கான இலவச வீடுகள் கட்டும் திட்டத்திலும் முறைகேடு நடந்துள்ளது.

5.09 லட்சம் வீடுகள் கட்ட மத்திய அரசு ஒதுக்கிய நிதியில் அ.தி.மு.க ஆட்சியில் முறைகேடு நடந்துள்ளது. கடந்த அ.தி.மு.க ஆட்சியில் தகுதியற்ற பயனாளிகளுக்கு 3,354 வீடுகள் முறைகேடாக வழங்கப்பட்டுள்ளதாக சி.ஏ.ஜி தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் நடந்த முறைகேடு மற்றும் ஊழல்களுக்கு சாட்சியாகும்.

இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தில், அப்போதைய பள்ளிக் கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு அரசு மடிக்கணினிகளை கொள்முதல் செய்வதற்கும், வழங்குவதற்கும் எந்த காலமுறையையும் பின்பற்றவில்லை என்பதை கண்டறிந்துள்ளது.

2017- 2020 ஆம் ஆண்டு வரை 80 சதவீத மாணவர்கள் மட்டுமே படிக்கும்போது மடிக்கணினிகள் பெற்றுள்ளதாகவும், பலருக்குப் பள்ளிப் படிப்பு முடிந்ததன் பின்தான் லேப்டாப் வழங்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ள சி.ஏ.ஜி அறிக்கை, 1,35,000 மாணவர்கள் உயர் கல்வி படிக்கிறார்களா? என்பதை உறுதிப்படுத்தாமலே, மடிக்கணினிகள் வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

காவல்துறை கட்டுப்பாட்டு அறை நவீனமயமாக்கும் திட்டத்தில் கடந்த அ.தி.மு.க அரசின் அலட்சியத்தால் காவல்துறைக்கு ரூ.14.37 கோடி வீண் செலவு ஏற்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு காலணி வழங்கும் திட்டத்தில் ரூ.5.4 கோடி வீண் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Dmk Admk Eps Ma Subramanian 2
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment