scorecardresearch

மருத்துவக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டினால் குண்டர் சட்டத்தில் கைது; அமைச்சர் மா.சு எச்சரிக்கை

750 புதிய வாகனங்கள் 108 ஆம்புலன்ஸ் சேவைக்காக வாங்கப்பட்டுள்ளது. காச நோயை கண்டறிவதற்காக 24 டிஜிட்டல் சேவை உள்ள வாகனங்கள் புதிதாக வாங்கப்பட்டுள்ளது – கோவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

மருத்துவக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டினால் குண்டர் சட்டத்தில் கைது; அமைச்சர் மா.சு எச்சரிக்கை
கோவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பு

4000 செவிலியர்கள் பணி நியமனங்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் நேர்முகத் தேர்வு அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கோவையில் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையில் 2023-24ம் ஆண்டுக்கான மானிய கோரிக்கையின் போது அறிவிக்கப்பட வேண்டிய புதிய திட்டங்கள் குறித்து மருத்துவ வல்லுநர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உடனான கலந்தாலோசனைக் கூட்டம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், தனியார் மருத்துவமனை நிறுவனர்கள், அரசு மருத்துவ பணியாளர்கள், அரசு மருத்துவத்துறை ஊழியர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு அவர்களது கருத்துக்களை முன்வைத்தனர்.

இதையும் படியுங்கள்: துப்பாக்கி சூட்டில் மீனவர் மரணம்; தமிழக – கர்நாடக எல்லையில் பதற்றம்

முன்னதாக இத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும் இதற்கு முன்பு மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் குறித்தும் அமைச்சர் எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், இக்கூட்டத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மருத்துவ வல்லுநர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு இத்துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான ஆக்கப்பூர்வமான கருத்துக்களை பதிவு செய்துள்ளதாக தெரிவித்தார். இந்த கருத்துக்கள் முதலமைச்சரின் அறிவுரையைப் பெற்று, நிதிநிலை அறிக்கையில் அமல்படுத்துவதற்கு உதவியாக இருக்கும் என்றார்.

மேலும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் இது முதல் முயற்சி. இந்தக் கூட்டத்தில் குறிப்பாக புற்றுநோய், காசநோய், தொழுநோய், சிறு குழந்தைகளுக்கும் ஏற்படுகின்ற நீரிழிவு நோய் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் எடுத்துச் சொல்லப்பட்டது. இவைகளுக்கான தீர்வுகளும் பல்வேறு அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கும் ஆராயப்பட்டுள்ளடு.

இத்துறையில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மக்களை தேடி மருத்துவம், நம்மைக் காக்கும் 48 போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 708 புதிய மருத்துவமனைகள் அமையும் என்று முதலமைச்சர் அறிவித்ததில் 500க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அதில் மருத்துவ பணியாளர்களை நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது, என்று கூறினார்.

கோவை அரசு மருத்துவமனையில் கூலி உயர்வு வழங்க கோரி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டம் நடத்தியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், அவர்கள் ஒப்பந்த பணியாளர்கள் என்பதால் அவர்கள் நேரடியாக அரசு சம்பளத்தை பெறுபவர்கள் அல்ல எனவும், எனவே அவர்களின் நிறுவனத்தினர் அரசு நிர்ணயத்துள்ள தொகையையும் சலுகைகளையும் வழங்க வேண்டும், அதற்க்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் நியாயமான சலுகைகளை பெற்றுத் தருவதற்கான நடவடிக்கை துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் வரலாற்றில் இதுவரை இல்லாதவரை தற்பொழுது 750 புதிய வாகனங்கள் 108 ஆம்புலன்ஸ் சேவைக்காக வாங்கப்பட்டுள்ளதாகவும் காச நோயை கண்டறிவதற்காக 24 டிஜிட்டல் சேவை உள்ள வாகனங்கள் புதிதாக வாங்கப்பட்டுள்ளதாகவும் கூடிய விரைவில் அது பயன்பாட்டுக்கு வர உள்ளதாகவும், கொரோனா தடுப்பூசியை பொருத்தவரை கோவாக்சின் தற்பொழுது கையிருப்பில் உள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும் அரசு மருத்துவமனைகளில் லஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் அரசு மருத்துவமனைகளில் லஞ்சம் என பொதுவான குற்றச்சாட்டை முன்வைக்க வேண்டாம் எனவும் அவ்வாறு எங்கேனும் நிகழ்வது தெரிந்தால் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் மருத்துவக் கழிவுகள் கண்ட இடங்களில் கொட்டுவது ஏற்படுவது அல்ல என தெரிவித்த அவர், அவ்வாறு நிகழ்ந்தால் சம்பந்தப்பட்ட நபர்களைக் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறினார். மேலும் மாநில எல்லைகளில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் பணியாளர்களுக்காக கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த இந்த ஆண்டு பரிசீலிப்பதாக தெரிவித்தார்.

பணியிடங்களை நிரப்பும் வகையில் ஏற்கனவே அறிவித்த 4308 பணியிடங்களைத் தவிர்த்து 4000 செவிலியர்கள் பணி நியமனங்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் நேர்முகத் தேர்வு அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் அதில் கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு 40 மதிப்பெண்கள் வழங்கப்பட்டு அவர்களையும் இதில் சேர்த்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் கொரோனா கட்டுப்பாடுகளை பொறுத்த வரை விமான நிலையங்களில் தொடர்ச்சியாக பின்பற்றப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மருத்துவ வல்லுநர்கள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களின் கருத்துக்கள் அனைத்தும் இத்துறை அலுவலர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளன என இவ்வாறு தெரிவித்தார்.

பி.ரஹ்மான், கோவை

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Ma subramanian says dont throw medical waste in public places at kovai

Best of Express