திருச்சி விமான நிலையத்தில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, 2021 ஆகஸ்ட் 5 ஆம் தேதி மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடங்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் சாமனப்பள்ளியில் முதல் நபருக்கு மருத்துவ பெட்டகம் வழங்கி அத்திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். தற்போது அத்திட்டத்தை மக்கள் பயனடைந்ததில் ஒரு கோடியாவது நபர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். திருச்சி மாவட்டம் சன்னாசிப்பட்டியை சேர்ந்த கோடியின் இலக்கத்தினை தொட்ட நபருக்கு திருச்சிக்கு வரும் 29 ஆம் தேதி வரும் முதல்வர் மருத்துவ பெட்டகத்தை தனது கையால் வழங்குகிறார்.
இதையும் படியுங்கள்: ரூ.5.35 கோடி மதிப்பு போதைப்பொருளைக் கண்டுபிடித்த மோப்ப நாய்; வீடியோ
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தாக்கம் ஒற்றை இலக்கத்தில் தான் உள்ளது. கடந்த ஏழு, எட்டு மாதங்களாக உயிரிழப்புகளும் இல்லாத நிலை தான் உள்ளது. அதற்கு காரணம், தடுப்பூசி செலுத்துவதை ஒரு இயக்கமாக தமிழ்நாடு முதலமைச்சர் மாற்றியதுதான்.
தமிழ்நாட்டில் முதல் தவணை தடுப்பூசியை 96 சதவீதம் பேரும், 2வது தவணை தடுப்பூசியை 92 சதவீதம் பேரும் செலுத்தி உள்ளனர். அதனால் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது.
கொரோனா மரபணு சோதனை மேற்கொள்ள மத்திய அரசு மாநிலங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. அதற்கான பிரத்யேக ஆய்வகம் சென்னையில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் தொடர்ந்து கொரோனா மரபணு மாற்றத்தை கண்காணித்து வருகிறோம். கொரொனா குறித்தும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
சீர்காழியைச் சேர்ந்த 13 வயது மாணவி அபிநயா தோல் அழுகல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். அது குறித்து அபிநயா முதல்வருக்கு கோரிக்கை வைத்த வீடியோ வைரலானது. அது எங்கள் கவனத்திற்கு வந்த பின்பு அபிநயாவை சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் வாத நோய் பிரிவில் அனுமதித்துள்ளோம். சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவரை இன்று மதியம் நானே நேரில் சென்று சந்தித்து விசாரிக்க உள்ளேன். மாணவி அபிநயாவிற்கு உரிய சிகிச்சை வழங்கப்படும்.

பொதுமக்களின் அத்தியாவசிய பிரச்சனைகள் பத்திரிக்கை, ஊடகங்கள், சமூக வலைதளங்களில் இதுபோன்று கோரிக்கைகளாக வரும் பட்சத்தில் அவை முதல்வரின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் 2019ல் எந்த நிலையில் இருந்ததோ அந்த நிலையில் தான் தற்போதும் உள்ளது. விரைவாக எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட வேண்டும், கோவையில் ஒரு எய்ம்ஸ் வழங்க வேண்டும் எனத் தொடர்ந்து மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து வருகிறோம். 2024 தேர்தலை மையப்படுத்தி மத்திய அரசு எய்ம்ஸ் மருத்துவமனையை கட்ட முயற்சித்தாலும், தேர்தலுக்காக செய்தாலும் அதை மக்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள்.
முன்னதாக வரும் 29 ஆம் தேதி முதலமைச்சர் மு க ஸ்டாலின் திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் நடைபெறும் அரசு விழாவில் கலந்துகொண்டு பல்வேறு நலத்திட்டங்களை வழங்க இருப்பதால், அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மா.சுப்ரமணியன், திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகர காவல் துறை ஆணையர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அதே போல மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் ஒரு கோடியாவது பயனாளியையும் சன்னாசிப்பட்டியில் முதலமைச்சர் நேரில் சந்தித்து மருந்து பெட்டகம் வழங்க இருப்பதால், அந்தப் பகுதியையும் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.
க. சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil