மதுரையில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்குப் பதிலாக வெறும் சுற்றுச்சுவர்தான் இருக்கிறது. அவர்கள் கலை அறிவியல் கல்லூரியில் அல்லது ஜிப்மரில் வகுப்புகளைத் தொடங்க விரும்பினர். ராமநாதபுரத்தில் புதிய கல்லூரியில் இடம் கொடுத்துள்ளோம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அறிவிக்கப்பட்டு பணிகள் நடந்துவருகிறது. அதனால், இந்த ஆண்டு முதலே எம்.பி.பி.எஸ் மாணவர்கள் சேர்க்கை தொடங்கப்பட்டது. வகுப்புகள் தொடங்க உள்ள நிலையில், எய்ம்ஸ் கட்டிடம் இன்னும் கட்டப்படாததால் எய்ம்ஸ் முதல் பேட்ச் மாணவர்களுக்கு வகுப்புகள் எங்கே எப்படி நடக்கும் என்ற கேள்விகள் எழுந்தன.
மதுரையில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் முதல் பேட்ச்சில் அனுமதிக்கப்பட்ட்டுள்ள 50 எம்.பி.பி.எஸ் மாணவர்களுக்கு வகுப்புகள் ராமநாதபுரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடங்கும். வகுப்புகள் கலப்பு மாதிரியில் நடத்தப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வியாழக்கிழமை தெரிவித்தார்.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், டெல்லியில் வெள்ளிக்கிழமையன்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவைச் சந்திக்கும்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடங்களை விரைவாகக் கட்டும்படி வலியுறுத்த உள்ளார்.
இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், “மதுரையில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்குப் பதிலாக வெறும் சுற்றுச்சுவர்தான் இருக்கிறது. அவர்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அல்லது ஜிப்மரில் வகுப்புகளைத் தொடங்க விரும்பினர். ராமநாதபுரத்தில் புதிய கல்லூரியில் இடம் கொடுத்துள்ளோம். இப்போது, கோயம்புத்தூரில் மற்றொரு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று நாங்கள் விருப்பம் தெரிவித்துள்ளோம்” என்று கூறினார்.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்த முதல் அறிவிப்பு 2015-ம் ஆண்டு வெளியிடப்பட்டு, 2019-ம் ஆண்டு பிரதமர் மோடியால் மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
மதுரையில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் 183 ஆசிரியர்கள், 16 மூத்த மருத்துவர்கள், 16 இளநிலைப் பணியாளர்கள் மற்றும் 32 ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பணியிடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார் அறிவித்துள்ளார். இருப்பினும், பிப்ரவரி 19-ம் தேதி எய்ம்ஸ் மதுரை, புதுச்சேரியில் உள்ள அதன் வழிகாட்டி நிறுவனமான ஜிப்மர் உடன் இணைந்து, ஒப்பந்த அடிப்படையில் இணை மற்றும் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டன. வீடியோ கான்பரன்சிங் மூலம் நேர்காணலுக்குப் பிறகு, உடற்கூறியல், உயிர்வேதியியல், உடலியல் மற்றும் சமூக மருத்துவம் ஆகியவற்றிற்கு ஆசிரிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
“இந்தப் பேராசிரியர்கள் இனி நேரடியாக வகுப்புகளைக் நடத்துவார்கள். மற்ற எல்லா புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளையும் போலவே, மதுரையில் உள்ள நிறுவனமும் மற்ற எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர்களுடன் இணைந்து சிறப்பு ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பாடங்கள் நடத்த ஒத்துழைக்கும். ஜப்பான் சர்வதேச கூட்டுறவு ஏஜென்சியின் நிதியுதவியுடன் கூடிய கட்டுமானப் பணிகள் குறித்த நேரத்தில் முடிக்கப்படுவதை உறுதி செய்வதற்கான அட்டவணையை நாங்கள் உருவாக்கி வருகிறோம்” என்று எய்ம்ஸ்-மதுரையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள பெரம்பலூர், மயிலாடுதுறை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு மருத்துவக் கல்லூரிகள் என மாநிலத்தில் மேலும் 6 மருத்துவக் கல்லூரிகளை அமைக்க அனுமதி அளிக்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வலியுறுத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.