சென்னை பட்டினம்பாக்கம் மீனவர் சமுதாய கூடத்தில் நடைபெற்ற 24வது மெகா தடுப்பூசி முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, அவருடன் துணை மேயர் மகேஷ் குமார், மாநகராட்சி துணை ஆணையர் மனிஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 83.8 சதவீதம், 15 - 18 வயதுடைய சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், பூஸ்டர் தடுப்பூசிக்கு தகுதியுள்ள 8.55 லட்சம் பேரில் 6.81 லட்சம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பின்னர், ஜெயக்குமார் சிறையில் தனக்கு எந்தவித அடிப்படை வசதியும் இல்லை என கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், குற்றம் செய்தவர்கள் உணர வேண்டும் என்பதற்காக தான் தண்டனை வழங்கி சிறையில் அடைக்கப்படுகிறது. அவருக்கு சிறையில் சோஃபா, ஏசியா போட்டு கொடுக்க வேண்டும் என எதிர்ப்பார்க்கிறா? என கேட்டார்.
தொடர்ந்து, சென்னை மேயர் மதம் தொடர்பான பாஜக சந்தேகம் குறித்து கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், சென்னை மேயர் பிரியா, பெரம்பூர் தொகுதியில் பலமுறை போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் எம்எல்ஏ செங்கை சிவத்தின் பேத்தி ஆகும். அவர் கிறிஸ்தவரா, ஹிந்துவா என அவரின் பிறப்பு சான்றிதழ் வாங்கி பார்த்து பாஜக தெரிந்து கொள்ளட்டும் என்றார்.
மேலும், அடுத்த வாரத்தில் கிங்ஸ் மருத்துவமனை வளாகத்தில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் பன்நோக்கு மருத்துவமனைக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்ட உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil