Ma Subramanian speech about corona spreading north indian students: கொரோனா தொற்று விவகாரத்தில் வட மாநில மாணவர்களை தமிழக மருத்துவதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இழிவு படுத்திய சில செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்ட நிலையில், அமைச்சர் என்ன கூறினார் என்பதை விரிவாக பார்ப்போம்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வட மாநிலங்களில் இருந்து வந்த மாணவர்களின் மூலம் தொற்று பரவியது கண்டறியப்பட்டுள்ளது என்று கூறினார்.
இதனை சில செய்தி நிறுவனங்கள் தவறாக புரிந்துக் கொண்டு செய்தி வெளியிட்ட நிலையில், அதனைப் பார்த்த உத்தர பிரதேச அமைச்சர் ஜிதின் பிரதாசா அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு கண்டனம் தெரிவித்தார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், நாம் அனைவரும் அனுபவித்ததைப் போல நோய் மற்றும் தொற்றுநோய்களுக்கு மாநிலங்களோ எல்லைகளோ தெரியாது. தமிழக மருத்துவத்துறை அமைச்சரின் மிகவும் பொறுப்பற்ற பேச்சு வட இந்தியர்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது என பதிவிட்டுள்ளார்.
ஆனால், அமைச்சர் மா.சுப்பிரமணியன், வட மாநில மாணவர்கள் மூலம் தொற்று பரவுவதாக கூறியுள்ளாறே தவிர, வட மாநில மாணவர்கள் பரப்புவதாக குற்றம் சாட்டவில்லை.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது,
கடந்த 3 மாதங்களாக கொரோனா பாதிப்பு 100க்கு குறைவாக உள்ளது. இறப்பு இல்லாத நிலை தொடர்கிறது. தற்போது, சென்னையில் ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம், சத்திய சாய் போன்ற கல்வி நிறுவனங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதற்கான காரணம் என்பது, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தொற்று பாதிப்பு இன்னும் கட்டுக்குள் வராமல் இருக்கிறது. குறிப்பாக டெல்லி, ஹரியானா, உத்திரப் பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, கேரளா போன்ற பல்வேறு மாநிலங்களில் தொற்று அதிகரித்து வரும் நிலையில், வட மாநிலங்களில் இருந்து வரும் மாணவர்கள் கல்வி நிறுவனங்களுக்கு வருகிறபோது அவர்களின் மூலம், கொஞ்ச கொஞ்சமாக தொற்று பரவத் தொடங்கியது, இந்த தகவல் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தின் நிர்வாகத்திற்கு தெரிந்த பின்னர், ஐஐடியில் நானும் துறையின் செயலாளரும் அந்த கல்வி நிறுவனங்களுக்குச் சென்று, அவர்களுக்கு பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தினோம். 9000 மாணவர்களுக்கு பரிசோதனை செய்ததில் 237 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. அவர்கள் அனைவரும் தற்போது குணமாக்கப்பட்டு அங்கு தொடர்ந்து படித்து வருகின்றனர்.
இதேபோல் அண்ணாப் பல்கலைக்கழகத்தில் தொற்று ஏற்பட்டபோதும், அங்கு சென்று வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்க வலியுறுத்தி, தொற்றைக் கட்டுக்குள் வைத்துள்ளோம். சத்திய சாய் பல்கலைக்கழகத்தில் வெளி மாநிலங்களில் இருந்து மாணவர்கள் அதிகம் பேர் தங்கி பயில்வதால், அங்கேயும் தொற்று ஏற்பட தொடங்கியது, அங்கும் தொற்றைக் கட்டுப்படுத்தியுள்ளோம்.
வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டில் 80 சதவீதத்திற்கும் அதிகமாக வட மாநிலத்தவர்கள் படித்து வருகின்றனர். அவர்களுக்குள் ஏற்பட்ட தொற்று பரவி, அங்கு 118 பேருக்கு தொற்று உறுதியானது. அவர்களில் பலர் தற்போது குணமடைந்துள்ளனர். இதனையடுத்து கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளோம்.
இதையும் படியுங்கள்: பா.ஜ.க இரட்டை வேடமா? பொன்னையன் புகாருக்கு அண்ணாமலை பதில்
கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். அதன்படி,நான்கு பேர் அமரக்கூடிய மேசை என்றால் இரண்டு பெரும்,6 பேர் அமரகக்கூடிய மேசை என்று 3 பேர்,எட்டு பேர் அமரகக்கூடிய மேசை என்று நான்கு பேரும் உட்கார்ந்து உணவருந்த உத்தரவிட்டுள்ளோம். உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தனி மனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம். இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.