அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நடந்தாலே மயக்கம் வருகிறது என்றும், மன அழுத்தம் காரணமாக பல உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை மற்றும் மருத்துவ சிகிச்சை பற்றிய தகவல்களை தெரிவித்துள்ளார்.
செந்தில் பாலாஜிக்கு நடந்தாலே மயக்கம் வருகிறது. மன அழுத்தம் காரணமாக பல உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள் என்று மா.சுப்பிரமணியன் கூறினார்.
மேலும், சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகரும் தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் மருத்துவ சிகிச்சையில் நலமுடன் இருக்கிறார் என்றும் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
முன்னதாக, புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அமைச்சர் பாலாஜிக்கு நவம்பர் 14 ஆம் தேதி இரவு முதல் உடல்நலக் கோளாறு ஏற்பட்டது. இதனால் செந்தில் பாலாஜி நவம்பர் 16 ஆம் தேதி ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. அப்போது, நீதிபதிகள் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 11 ஆவது முறையாக நீட்டித்து, டிசம்பர் 4 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“