இந்திய விமானப் படையின் விமான சாகச நிகழ்ச்சியைக் காண வந்தவர்களில் 5 பேர் உயிரிழந்த நிலையில், லட்சக் கணக்கில் வந்த பொதுமக்களுக்கு போதிய ஏற்பாடு செய்யவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தன. இந்நிகழ்வு குறித்து பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியனிடம் செய்தியாளர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். மேலும், விமான சாகச நிகழ்ச்சியின்போது வந்திருந்த மக்களுக்கு எத்தனை தண்ணீர் டேங்க் வைக்கப்பட்டது என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு அரசியல் செய்யாதீர்கள் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் பதிலளித்தார்.
இந்திய விமானப் படையின் 92-வது ஆண்டு நிறைவையொட்டி, சென்னை மெரினா கடற்கரை வான்வெளியில், விமானப் படையின் சாகச நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 6) நடைபெற்றது. லட்சக் கணக்கான மக்கள் மெரினாவுக்கு வந்து விமான சாகச நிகழ்ச்சியைக் கண்டு களித்தனர். அதே நேரத்தில், கடும் வெயில் தாக்கம் இருந்ததால், 230 பேர் மயங்கி விழுந்தனர். 93 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதே நேரத்தில், விமான சாகச நிகழ்ச்சியைக் காண வந்தவர்களில் 5 பேர் உயிரிழந்தனர். இந்நிகழ்வுக்கு முறையான பாதுகாப்பு கொடுக்க தவறிய மு.க. ஸ்டாலின் அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்தார்.
விமான சாகச நிகழ்ச்சியைக் காண வந்தவர்களில் 5 பேர் உயிரிழந்தது தொடர்பாக உயர்மட்ட விசாரணை தேவை என்று வி.சி.க தலைவர் திருமாவளவன் வலியுறுத்தினார்.
இந்நிலையில், இந்நிகழ்வு குறித்து பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியனிடம் செய்தியாளர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். மேலும், விமான சாகச நிகழ்ச்சியின்போது வந்திருந்த மக்களுக்கு எத்தனை தண்ணீர் டேங்க் வைக்கப்பட்டது என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு அரசியல் செய்யாதீர்கள் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் பதிலளித்தார்.
“சென்னை விமான சாகச நிகழ்ச்சியின் போது நடந்த சம்பவங்களை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்று நினைக்கக் கூடாது. இறந்தவர்கள் ஐவருமே மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பலனின்றி இறந்து போகவில்லை. இறந்துதான் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள். 15 லட்சம் மக்களும் ஒரு குறிப்பிட்ட இடத்துக்குள் வந்துவிட முடியாது. எங்கெல்லாம் விமான சாகச நிகழ்ச்சி தெரியுமோ அங்கிருந்தெல்லாம் கூட மக்கள் பார்த்திருக்கிறார்கள். நிகழ்ச்சிக்கே வராத சிலர்தான் பூதக்கண்ணாடியை வைத்து குற்றம் கண்டுபிடிக்கின்றனர். எனவே இதை அரசியலாக்க வேண்டாம்.
இது முழுக்க முழுக்க இந்திய விமானப்படையின் நிகழ்ச்சி. அதனால்தான் அவர்களையும் நாம் குறைசொல்லிவிட முடியாது. வெயில் இருக்கும் என்று தெரிந்துதான் தொப்பி, கண்ணாடி அணிந்து வாருங்கள் என்று அவர்களும் முன்பே கூறியிருந்தார்கள். இந்தியாவின் விமானப்படை கட்டமைப்பை உலகுக்கு எடுத்துக் காட்டும் ஒரு அற்புதமான நிகழ்ச்சி இது. இந்த உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணம் வெயில் தாக்கமும், நீர்ச்சத்து குறைபாடும்தான். மருத்துவ வசதி இல்லையென்று சொல்லமுடியாது. காரணம் மெரினாவுக்கு அருகே தான் ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை என அனைத்தும் உள்ளது. இப்படி ஒரு கட்டமைப்பு உலகத்திலேயே எங்கும் கிடையாது” இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.