திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில், உள்ள தேயிலைத் தோட்டங்களை 1929-ம் ஆண்டு பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் என்ற தனியார் நிறுவனம் 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்தது. அந்த குத்தகை காலம் 2028-ம் ஆண்டில் முடிவடையவுள்ள நிலையில் அதற்கு முன்பாகவே அந்த நிறுவனம்,தேயிலை தோட்டத் தொழிலாளர்களை கட்டாய ஓய்வில் அனுப்ப முடிவு செய்தது.
மேலும், அங்கே பணியாற்றி வரும் தொழிலாளர்களை அங்கே இருந்து கட்டாயமாக வெளியேற்றும் நடவடிக்கையிலும் தனியார் தேயிலைத் தோட்ட நிறுவனம் ஈடுபட்டு வந்தது. மேலும், மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் இருந்து ஆகஸ்ட் 7-ம் தேதிக்கு முன்னதாக தொழிலாளர்கள் வெளியேற வேண்டும் எனவும் நோட்டீஸ் அனுப்பியது.
மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத்தில் 3-4 தலைமுறைகளாக தங்கி வேலை செய்து வரும் மக்களை கட்டாயமாக வெளியேற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசியல் கட்சிகள், சமூக செயற்பாட்டாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத்தில் இருந்து தொழிலாளர்களை கட்டாயமாக வெளியேற்றும் தனியார் நிறுவனத்தின் நடவடிக்கைக்கு எதிராக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை, ‘மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற தனியார் நிறுவனம் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. அந்த தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு வசதிகளை செய்து தரும்வரை யாரையும் வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது’ என்று உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் நிறுவனம், மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தங்கள் வீடுகளை தற்காலிகமாக காலி செய்ய வேண்டாம் எனவும் அறிவிப்பு வெளியிட்டது.
மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், தமிழ்நாடு அரசு, இலங்கையிலிருந்து வந்த தமிழர்களுக்காக எப்படி வாழ்வளிக்க டான்டீ நிறுவனம் தொடங்கப்பட்டதோ, அதே போல, மாஞ்சோலத் தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால், தமிழ்நாடு அரசு, மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத்தை ஏற்று நடத்த முடியாது, டான் டீ நிறுவனத்திலும் இணைக்க முடியாது என்று தெரிவித்தது.
இந்நிலையில், மாஞ்சோலை கிராம மக்கள் வலுக்கட்டாயமாக கட்டாயப்படுத்தி வெளியேற்றப்படுவதாக பாளையங்கோட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் முத்துராமன் என்பவர் ஜுலை 7-ம் தேதி தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தார்.
அந்த மனுவில், மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் விவகாரத்தில், வன உரிமை சட்டம் 2006ன் கீழ் மாஞ்சோலை மக்களுக்கு வன உரிமை மறுக்கப்பட கூடாது என்றும் மாஞ்சோலை மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்படுகிறார்கள், இது மனித உரிமை மீறல் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“