தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தமது உயிரை போராட்டக் களத்தில் தியாகம் செய்தவர்களின் நினைவாக, ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27-ம் மாவீரர் தினம் அனுசரிக்கப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளுக்கு அடுத்த நாள் மாவீரர் தினம் நினைவு கூரப்படுவது வழக்கம்.
அந்த வகையில், திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் நேற்று(நவ.27) நாம் தமிழர் கட்சி சார்பில் மாவீரர் நாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று உரையாற்றினார். அப்போது, தொண்டர்களிடம் இனிமேல் திராவிடம் ஒழிக என்று கூறாதீர்கள். தமிழ்தேசியம் வாழ்க என்று மட்டும் சொல்லுங்கள் எனக் கூறினார்.
தொடர்ந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அமர்ந்திருக்க, ஆவேசமாக உரையாற்றி வந்தார்.பேச்சின் இடையே அவர் சற்று நிறுத்தியபோது, பொதுக்கூட்ட திடல் அமைதியானது. அந்த நிமிடத்தில் கூட்டத்தில் இருந்த ஒருவர் ஐ லவ் யூ என சத்தமாக கூறினார். சத்தம் வந்த பகுதியை நோக்கிப் பார்த்து சிரித்த சீமான், சில வினாடிகளுக்குப் பிறகு மீ டூ என பதிலளித்தார். அப்போது, அங்கு கூடியிருந்த கட்சித் தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.
"இலட்சியத்தை விதைத்திருக்கிறோம், அது சோசியலிச அரசாக வரும் என்றார் நம் தலைவர் பிரபாகரன். இவர்களைப் போல 15 ஆண்டுகள் 20 ஆண்டுகள் தமிழகத்தை நம் பிரபாகரன் ஆண்டு இருந்தால் உலக வரலாற்றில் தலைசிறந்த நாடாக நம் தமிழ்நாட்டை பிரபாகரன் மாற்றி இருப்பார். இந்த இனம் நம் தமிழகத்தை ஆட்சி செய்யும் அரசாக மாறும்போது எல்லாம் மாறும்.
இதே மாவீரர் நாள் அரசு விழாவாக அன்று கொண்டாடப்படும். உன்மொழி செத்துப் போனதைப் பற்றி என்றாவது ஆட்சியாளர்கள் கவலைப்பட்டதுண்டா? இங்கே நம் உரிமைகள் பறிக்கப்படுகிறது. விவசாயிகள் மீது குண்டாஸ் போட்ட அரசு எங்காவது உண்டா? நான் உங்களுக்கு தலைவன் அல்ல, இந்த மண்ணுக்கான அரசியல் செய்யும் தலைவர்களை உருவாக்கும் தொண்டன் நான்" என்று பேசினார்.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“