அண்ணாமலை பேசிய ஆடியோ ஆதாரங்கள்: மதன் ரவிச்சந்திரன் புதிய வீடியோ

Madan released new video with BJP annamalai audio in ragavan issue: இதுபோன்ற வீடியோவை வெளியிட காரணமாக இருந்தது அண்ணாமலை தான் எனக்கூறும் மதன், மேலும் கட்சிக்குள் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதாக அண்ணாமலை கூறியதாக குறிப்பிட்டிருக்கிறார்

பாஜகவில் வீடியோ விவகாரம் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், அண்ணாமலை பேசியிருப்பதாக மதன் வெளியிட்டுள்ள ஆடியோ ஆதாரங்கள் சர்ச்சையை மேலும் கூட்டியுள்ளன.

தமிழக பாரதிய ஜனதா கட்சியில் மாநில பொதுச் செயலாளராக இருந்த கே.டி.ராகவன் தொடர்பாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையானது. இது குறித்து ட்விட்டரில் பதிலளித்த கே.டி.ராகவன், என்னையும் என் கட்சியையும் களங்கப்படுத்த இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. மாநிலத் தலைவர் அண்ணாமலையைச் சந்தித்து ஆலோசனை செய்தேன். நான் என்னுடயை கட்சி பொறுப்பை ராஜினாமா செய்கிறேன். குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். சட்டப்படி சந்திப்பேன். தர்மம் வெல்லும், என பதிவிட்டிருந்தார்.

இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று காலை சமூக ஊடகத்தில் வெளியான கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் அவர்கள் சம்பந்தப்பட்ட வீடியோ குறித்த செய்திகளை அறிந்தேன்.  வீடியோவை வெளியிட்ட மதன் ரவிச்சந்திரன் என்னை சந்தித்து பேசியது உண்மை. முதல் முறையாக அவர், என்னை கட்சி அலுவலகத்தில் சந்தித்து பேசியபோது, கட்சியின் பொறுப்பில் இருப்பவர்கள் பற்றிய வீடியோ ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும், உடனடியாக அவர்கள் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். ஒருவர் மீது சுமத்தப்படும் குற்றங்களால் மட்டும் அவருக்கு தண்டனை கொடுக்கப்பட்டு விடக்கூடாது. அதன் உண்மை தன்மையை ஆராய வேண்டும். குற்றச்சாட்டில் உண்மை இருக்கும் பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தேன்.

ஆகவே அந்த வீடியோ பதிவுகளை எங்களிடம் காட்சிப்படுத்தினால் அதன் உண்மைத் தன்மையை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினேன். ஆனால் அவர் பதிவுகளை என்னிடம் ஒப்படைக்க மறுத்து விட்டார். அடுத்த நாள் மறுபடி என்னை அலுவலகத்தில் சந்தித்த மதன், வலுவான வீடியோ பதிவுகள் உள்ளன. அவர்கள் மீது நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கூறினார்.

ஒரு சர்ச்சைக்குரிய வீடியோ பதிவை நம்பி மட்டும், அதன் உண்மைத்தன்மையை அறியாமல், சம்பந்தப்பட்டவர்களிடம் அதன்மேல் விசாரணை செய்யாமல் குற்றம்சாட்டும் நபரின் வாய் வார்த்தையை மட்டும் நம்பி எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்?. ஆகவே மதன் இரண்டாம் முறை வலியுறுத்திய போதும் ஆதாரமாக அவர் சுட்டும் பதிவுகளை சமர்ப்பிக்க கூறினேன்.

அதன்பின் மூன்றாவது முறையாக அலைபேசியில் குறுஞ்செய்து அனுப்பி, நான் ஏற்கனவே கேட்டுக்கொண்டபடி எனக்கு உடனடியாக நியாயம் கிடைக்குமா? நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று கேட்டிருந்தார். உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தான் வீடியோ பதிவுகளை வெளியிடப் போவதாக குறுஞ்செய்திகள் மூலம் கூறியிருந்தார். முன்னர் இரண்டு முறை நேரில் சந்தித்தபோது நான் கூறியபடி குற்றச்சாட்டு என்ன என்பதை அறியாமல் நடவடிக்கை எடுக்க முடியாது என்ற என் முடிவில் நான் உறுதியாக இருந்தேன். ஆகவே என் பதிலில், செய்து கொள்ளுங்கள் என்று சுருக்கமாக முடித்து விட்டேன். என்று கூறியிருந்தார்.

மேலும், யூடியூபர் மதன் ரவிச்சந்திரன் சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருக்கும் வீடியோ பதிவில், இது போல் இன்னும் வேறு நபர்களின் பதிவுகள் வெளிவர இருக்கிறது என்று சொல்லியிருப்பது, அவருக்கு ஏதேனும் உள்நோக்கம் இருக்குமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. இது கண்டிப்பாக ஏற்றக்கொள்ளத்தக்கது அல்ல. நான் தொடர்ந்து மூன்று முறை வலியுறுத்தியும், கட்சியின் தலைவருக்கும் அமைப்புச் செயலாளருக்கும் ஆதாரங்களை காட்சிப்படுத்தாமல், தன் சொல்லை மட்டும் நம்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவருக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு பாஜக எப்படி பொறுப்பேற்க முடியும்? அவரவர் செயலுக்கும், அவரவர் நடவடிக்கைக்கும், அவரவர்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறி முடித்திருந்தார்.

இந்த நிலையில், மதன் ரவிச்சந்திரன் மற்றும் வெண்பா இருவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதாக தமிழக பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் பெயரில் அறிக்கை வெளியானது. அதில் பாரதிய ஜனதா கட்சியின் கொள்கைக்கு முரணாக வீடியோ பதிவில் கருத்து தெரிவித்துள்ள மதன், வெண்பா ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுகிறார்கள் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மதன், பாஜக தலைவர் அண்ணாமலையுடன் பேசுவதாக சில உரையாடல்கள் அடங்கிய ஆடியோக்களை தனது முகநூல் பக்கத்தில் இணைத்துள்ளார். அண்ணாமலை சொல்லித் தான் அந்த வீடியோவை வெளியிட்டதாக குறிப்பிடும் மதன், தொடர்ந்து அண்ணாமலை மாறி மாறி பேசி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மதன் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், அண்ணாமலை குரலில் வரும் ஆடியோவில், அந்த பெண்களுக்கு நியாயம் வேண்டும். எனக்கும் பெண் குழந்தைகள் இருக்கின்றனர். அதனால் இந்த வீடியோவைக் கண்டிப்பாக வெளியிடுங்கள். நீங்களும் பத்திரமாக இருங்கள், என்று கூறுவதாக உள்ளது.

இதுபோன்ற வீடியோவை வெளியிட காரணமாக இருந்தது அண்ணாமலை தான் எனக்கூறும் மதன், மேலும் கட்சிக்குள் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதாக அண்ணாமலை கூறியதாக குறிப்பிட்டிருக்கிறார். தனக்கும் தன்னுடன் வந்த பெண்ணுக்கும் கட்சியில் பொறுப்புகள் தருவதாக அவர் பேரம்பேசியதாகவும் மதன் சில ஆடியோ ஆதாரங்களை அந்த வீடியோவில் இணைத்துள்ளார்.

மேலும், தான் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் கட்சி அலுவலகத்தில் உள்ள தனது அறையின் கதவுகளை, வெளிப்படைத்தன்மைக்காக வெளியில் இருந்து பார்த்தாலும் உள்ளே நடப்பது தெரியும் அளவுக்கு மாற்றி அமைத்தேன் என அண்ணாமலை கூறியதாக சொல்லும் மதன் அது தொடர்பான ஆடியோ பதிவையும் இணைந்திருந்தார்.

தற்போது பாஜக தலைவர் அண்ணாமலையை, மதன் குற்றம் சுமத்தியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Madan released new video with bjp annamalai audio in ragavan issue

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com