சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த நிகிதா என்ற பெண், கோவில் காவலாளி அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் அளித்ததையடுத்து, அவரை விசாரணைக்காக அழைத்துச்சென்ற திருப்புவனம் போலீசார், சட்டவிரோதமாக 2 நாட்கள் காவலில் வைத்துக்கொண்டு கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் படுகாயமடைந்த அஜித்குமார், பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்த, தமிழக அரசு இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு ஒப்படைத்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், மதுரை திருநகரைச் சேர்ந்த மகாராஜன் என்ற நபர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், "மடப்புரம் கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை, திருப்புவனம் போலீசாருடன் சிலர் ரகசியமாக எடுத்துச் சென்றுள்ளனர்.
அஜித்குமாரின் உடலில் இருந்த காயங்கள் மறைக்கப்பட்டு, பிரேத பரிசோதனை முறையாக நடைபெறவில்லை. மேலும், குடும்பத்தினரை சமரசத்திற்கு அழுத்தம் தரும் வகையில், அதிக அளவில் பணம் தரப்படும் என கட்டப்பஞ்சாயத்து நடைபெற்றுள்ளது" என்றார்.
இந்த மனு நேற்று நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் மரியா கிளாட் அவர்களின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அஜித்குமார் மரணத்துடன் தொடர்புடைய அனைத்து வழக்குகளும் இன்றைய நாளில் (ஜூலை 8) ஒன்றிணைத்து விசாரிக்கப்பட உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் தாக்கல் செய்த விசாரணை அறிக்கையும், டிஜிபி தரப்பில் தாக்கல் செய்ய உள்ள நிலை அறிக்கையும், ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
மடப்புரம் அஜித்குமார் மரணத்துடன் தொடர்புடைய பல்வேறு வழக்குகள், தற்போது ஐகோர்ட் மதுரை கிளையில் தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வருகின்றன.