கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஈஷா யோகா மையம் இயங்கி வருகிறது. இந்த யோகா மையத்தில் யோகா கற்றுத் தரப்படுவதாகவும் தியானம் சொல்லித் தரப்படுவதாகவும் அந்த அமைப்பினர் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பல்வேறு சர்ச்சைகளுக்கு வித்திடும் வகையில் ஈஷா யோகா மையத்தின் நடவடிக்கைகள் சமீபகாலமாக இருக்கின்றன.
வேளாண் பல்கலைக்கழக ஓய்வு பெற்ற பேராசிரியர் காமராஜர் மகள்கள் பெயர் மாற்றம் செய்து ஈஷாவில் தங்க வைக்கப்பட்டு இருப்பது, யானை வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு, தியானத்திற்கு வரும் நபர்கள் காணாமல் போவது உள்ளிட்ட ஏராளமான சர்ச்சைகள் ஈஷா யோகா மையத்தில் அரங்கேறி வருகின்றன.
பொதுவெளியில் கடும் கண்டனத்திற்கு உள்ளான இந்த சம்பவங்களை தழுவி இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பாக கோவை டாடாபாத் பகுதியில் தமிழ்நாடு தழுவிய கண்டன போராட்டம் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் முத்தரசன் இதில் கலந்து கொண்டார்.
அப்போது மர்ம தேசமாக விளங்கும் ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் அத்துமீறல்கள் மற்றும் ஜக்கி வாசுதேவ் குற்ற பின்னணி குறித்து விசாரிக்க வேண்டும் என முழங்கினர். பழங்குடிகள் மற்றும் ஆதிவாசிகளின் நிலங்கள், அரசுக்கு சொந்தமான நிலங்கள், ஈசா யோகா மையத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
ஈசா யோகா மையத்தில் தியானத்துக்கு செல்வோர் காணாமல் போவது, அங்குள்ள மருத்துவர்கள் முகாம்களில் பாலியல் ரீதியாக அத்துமீறுவது, பொதுமக்கள் ஈஷாவுக்கு செல்லும் பொழுது அவர்கள் மூளை சலவை செய்யப்படுவது உள்ளிட்ட விடயங்கள் குறித்து சர்ச்சையாக வெடித்திருக்கும் நிலையில் இதுகுறித்து உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் உரிய விசாரணை நடத்த வேண்டும் என கண்டன போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் முழங்கினர்.
இந்தப் போராட்டத்தில் ஜக்கி வாசுதேவுக்கு எதிராகவும் ஈசா யோகா மையத்தை மூடவும் விமர்சனங்கள் வந்த போதும் ஒன்றிய அரசாங்கம் ஜக்கி வாசுதேவ் மீது காட்டும் கரிசனையை கண்டித்தும், பாதாகளை ஏந்தி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் என இந்த கலந்து கொண்டனர்.