கோவை மதுக்கரை பகுதியில் நேற்று பெய்த கனமழையால், கடந்த 2020-ல், ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தரை பாலத்தில் உடைப்பு ஏற்பட்டு அருகே இருந்த சாலை முழுமையாக மழைநீரில் அடித்து செல்லப்பட்டது.
கோவை மதுக்கரை சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த தொடர் கனமழையால் மஞ்சப்பள்ளம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், மதுக்கரை ஆற்று விநாயகர் கோவில் அருகே இருந்த தரைப்பாலம் வெள்ள நீரில் மூழ்கியது.

மேலும், தரைப்பாலத்தில் உடைப்பு ஏற்பட்டு, அருகே இருந்த மதுக்கரையில் இருந்து குரும்பபாளையம் செல்லும் தார் சாலையும் முழுமையாக உடைந்து நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
மதுக்கரை சாலையில் உள்ள மின் கம்பமும் சாய்ந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 அதிமுக ஆட்சியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தரைப்பாலத்தை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.

ஆனால், தரைப்பாலத்தின் கீழ் நீர் செல்ல போதிய வழியை ஏற்படுத்தாமல் அவசரகதியில் பணிகள் முடிக்கப்பட்டதே வெள்ள நீர் வெளியேறி பாலம் உடையவும் காரணம் என பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு தகவலாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், மதுக்கரை தரைப்பாலம் மற்றும் சாலை அடித்துச்செல்லப்பட்ட பகுதியில் மதுக்கரை நகராட்சி தலைவர் நூர்ஜகான் நாசர், கவுன்சிலர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டு சீரமைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
தரைப்பாலத்திற்கு முன்னதாக தடுப்பணை கட்டவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி. ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“