‘பிரஸ் மீட் வச்சுடுவேன்’- அதிமுக.வில் புயலைக் கிளப்பும் மதுசூதனன்

மதுசூதனன் – அமைச்சர் ஜெயகுமார் ஆகியோர் ஒரே தலைமையின் கீழ் வந்தாலும் அவர்கள் இருவர் இடையிலான பிணக்கு தீரவில்லை.

Madhusudanan To Raise Issue, Madhusudanan Met CM Edappadi K.Palaniswami, மதுசூதனன், மதுசூதனன் மோதல், மதுசூதனன் பேட்டி
Madhusudanan To Raise Issue, Madhusudanan Met CM Edappadi K.Palaniswami, மதுசூதனன், மதுசூதனன் மோதல், மதுசூதனன் பேட்டி

மதுசூதனன் – அமைச்சர் ஜெயகுமார் இடையிலான மோதல் முற்றியிருக்கிறது. இதன் எதிரொலியே அடுத்தடுத்து தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார் மதுசூதனன்!

மதுசூதனன், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா அணியில் இருந்தவர்தான்! பின்னர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு சென்றார். வட சென்னை அதிமுக.வில் மதுசூதனனின் எதிரியாக சொல்லப்படும் அமைச்சர் ஜெயகுமார் ஆரம்பத்தில் சசிகலா அணியிலும், பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியிலும் நீடித்து வருகிறார்.

இபிஎஸ்-ஓபிஎஸ் அணிகள் இணைப்புக்கு பிறகு, மதுசூதனன் – அமைச்சர் ஜெயகுமார் ஆகியோர் ஒரே தலைமையின் கீழ் வந்தாலும் அவர்கள் இருவர் இடையிலான பிணக்கு தீரவில்லை. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மீனவர் ஒருவரை வேட்பாளராக நிறுத்த அமைச்சர் ஜெயகுமார் காய் நகர்த்தியதாக அந்தத் தேர்தலுக்கு முன்பே ஆதங்கப்பட்டார் மதுசூதனன்.

எனினும் அவைத்தலைவர் என்ற முறையில் மதுசூதனனின் விருப்பத்திற்கு முன்னுரிமை கொடுத்து அவரை இபிஎஸ்-ஓபிஎஸ் ஆகியோர் வேட்பாளர் ஆக்கினார்கள். ஆனால் மதுசூதனன் ஜெயிக்கவில்லை. உடனே, தோல்விக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் ஜெயகுமாரை குறி வைத்து அப்போதே கோரிக்கை வைத்தார் மதுசூதனன்.

இது தொடர்பாக முதல்வர் பழனிசாமிக்கு அவர் அனுப்பிய கடிதம், அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. எனினும் வட சென்னையை 2- ஆக பிரித்து மதுசூதனன் ஆதரவாளரான ஆர்.எஸ்.ராஜேஷூக்கு மாவட்டச் செயலாளர் பதவி கொடுத்த பிறகு சற்றே அமைதி ஆனார் மது.

இந்தச் சூழலில்தான் வட சென்னையில் மீனவர் கூட்டுறவு சங்கத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் வந்தது. இதையொட்டி மதுசூதனன் ஆதரவாளர்களும், அமைச்சர் ஜெயகுமார் ஆதரவாளர்களும் மோதிக்கொண்டனர். வெளிநாட்டில் அரசுமுறைப் பயணமாக சுற்றிக்கொண்டிருந்த அமைச்சர் ஜெயகுமார் அங்கிருந்தபடியே மீன்வளத்துறை அதிகாரிகளையும், போலீஸாரையும் தனது ஆதரவாளர்களுக்கு ஆதரவாக திருப்பியதாக கூறப்படுகிறது.

இதனால் கொந்தளித்த மதுசூதனன் ஆதரவாளர்கள் மறியல் நடத்தினர். மேலும் மதுசூதனன் பத்திரிகையாளர்களை சந்தித்து இது தொடர்பாக பேட்டி அளிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. இதைத் தொடர்ந்து மதுசூதனனை சமரசம் செய்யும் முயற்சிகளில் இபிஎஸ்-ஓபிஎஸ் இறங்கினர்.

அதன் முதல்கட்டமாக நேற்று (ஆகஸ்ட் 27) துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து மதுசூதனன் தனது குமுறல்களை கொட்டினார். பின்னர் ஓபிஎஸ் ஆலோசனை அடிப்படையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவரான உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை சந்தித்து மதுசூதனன் பேசினார்.

தொடர்ந்து முதல் அமைச்சரை சந்திக்கவும் மதுசூதனனுக்கு நேரம் ஒதுக்கப்பட்டது. இன்று காலை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மதுசூதனன் உரையாடினார். முதல்வரைப் பொறுத்தவரை தனது கண்ணும், காதுமாக இயங்கி வரும் அமைச்சர் ஜெயகுமாரை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை.

இதனால் மதுசூதனன் இன்னும் முழுமையாக சாந்தமடையவில்லை. இன்று (ஆகஸ்ட் 28) மாலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை அவர் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. அதற்கு முன்பாக இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் சீனியர் அமைச்சர்கள் தலையிட்டு மதுசூதனனை சமரசம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Madhusudanan against minister jeyakumar met cm edappadi k palaniswami

Next Story
திமுக-வின் 2வது தலைவர் பதவியேற்றார் மு.க. ஸ்டாலின்… புகைப்படத் தொகுப்பு!Tamil Nadu news today live updates
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express