‘பதில் சொல்லுங்கள், மிஸ்டர் பழனிசாமி!’ மதுசூதனன் கடிதம் கிளப்பும் பூகம்பம்

இ.மதுசூதனன்... அதிமுக.வின் அவைத்தலைவர்! ஆர்.கே.நகரில் தோல்வியை தழுவிய அவர் தலைமைக்கு எழுதிய கடிதம் புதிய பூகம்பத்தை கிளப்பியிருக்கிறது.

By: Updated: January 10, 2018, 01:23:16 PM

இ.மதுசூதனன்… அதிமுக.வின் அவைத்தலைவர்! ஆர்.கே.நகரில் தோல்வியை தழுவிய அவர் தலைமைக்கு எழுதிய கடிதம் புதிய பூகம்பத்தை கிளப்பியிருக்கிறது.

இ.மதுசூதனன், அதிமுக.வின் ஆரம்பகால உறுப்பினர்! ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார். பின்னர் அவரை கட்சியின் அவைத்தலைவராக ஜெயலலிதா நியமித்தார். அண்மையில் இரட்டை இலை சின்னம் வழக்கில் உத்தரவு பிறப்பித்த இந்திய தேர்தல் ஆணையம், இ.மதுசூதனனை அவைத்தலைவராக கொண்ட பிரிவை அதிமுக.வாக அங்கீகரிப்பதாக தெரிவித்தது.

மதுசூதனன் ஏற்கனவே ஓபிஎஸ் அணி சார்பில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர். அணிகள் இணைந்து சின்னம் பெற்ற பிறகும், விடாப்பிடியாக தனக்கு சீட் கேட்டு ஆர்.கே.நகரில் இரட்டை இலை சின்னத்தில் நின்றார்.

மதுசூதனன் இந்தத் தேர்தலில் யாரும் எதிர்பாராதவிதமாக சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரனிடம் தோற்றார். 13 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் இடைத்தேர்தலில் ஆளும்கட்சி தோற்றிருப்பது இப்போதுதான். இந்தத் தோல்விக்கு அமைச்சர் ஜெயகுமார், அந்தத் தொகுதியின் அதிமுக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட வெங்கடேஷ்பாபு எம்.பி. ஆகியோரின் உள்குத்துதான் காரணம் என மதுசூதனன் தரப்பு நினைப்பதாக தெரிய வந்திருக்கிறது.

மதுசூதனன் இது தொடர்பாக பரபரப்பான கடிதம் ஒன்றை கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்தில் இடம் பெற்றிருப்பதாக கூறப்படும் அம்சங்கள் இவை :

‘நான் தோற்றதற்கு என்ன காரணம், யார் காரணம், பதில் சொல்லுங்கள் மிஸ்டர் பழனிசாமி? அம்மா மறைவுக்குப் பின்னர் கழகம் இரண்டானது. தொண்டர்கள் தவித்தனர். நாம் தனித்தனியாக இருவேறு அணியாகக் கிடந்தோம். அப்படிக் கிடந்த அணிகளை ஒன்றாக்கி கட்சியை வலுவாக்கியதுதான் நான் செய்த தவறா?

நம்முடைய பிரிவால் எதிரிகள் வலுப்பெற்றுக் கழகத்தை சிதைத்து விடுவார்கள் என்று கருதி நானும் அண்ணன் கே.பி.முனுசாமியும்தானே இந்தப் பேச்சு வார்த்தைக்கே பாலம் அமைத்துக் கொடுத்தோம்? அணிகளை இணைய விடாமல், எதிரணிகளுக்கு பலம் சேர்க்கும் விதமாக இணைப்பைத் தடுத்தவர், இன்றுவரை உங்கள் நம்பிக்கைக்கு உரிய மந்திரிதானே?

தொகுதியில் நான் தோற்க கடமை உணர்வுடன் செயலாற்றியவரும் அந்த மந்திரிதானே? உங்களுக்கு அனைத்தும் தெரியும். நான் புதிதாகச் சொல்ல வேண்டியது ஒன்றும் இல்லை. ஆர்.கே.நகர் தொகுதியில் நான் வெற்றி பெற்றிருந்தால் அது கழகத்தின் வெற்றி, அம்மாவின் வெற்றி, புரட்சித்தலைவரின் வெற்றி, இரட்டை இலையின் வெற்றி. நான் தோற்றது இவை அத்தனையும் தோற்றது போல்தானே?
இந்த நிமிடம் வரையில் கழகம், இடைத் தேர்தலில் தோற்றது குறித்து எந்த ஆய்வுக் கூட்டமும் நம் தரப்பிலிருந்து நடத்தப்பட வில்லையே அது ஏன்? அம்மா இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்குமா? ஆர்.கே. நகர்த் தொகுதிக்கான தேர்தலில் வார்டு 38-ல் நான்கு பாகமும், 43-ல் ஐந்து பாகமுமாக 9 பாகங்கள் மந்திரி ஜெயகுமார் பொறுப்பில் கொடுத்தீர்களே… ஒன்பதாயிரத்து, 500 வாக்குகள் இருக்கிற இந்த இடத்தில் நாம் வாங்கிய வாக்குகள் வெறும் 1,800 தானே? அதை ஏன் என்று கேட்டீர்களா?

மூத்த மந்திரி ஜெயகுமாரே இப்படி ‘வேலையில் சுணக்கம்’ காட்டியதைப் பார்த்த மற்ற பொறுப்பாளர்கள், முதல்நாளே அவரவர் ஊர்களுக்குக் கிளம்பிப் போய் விட்டது உங்களுக்குத் தெரியுமா? அம்மா மட்டும் இன்று இருந்திருந்தால், தொகுதியில் வேலை பார்த்த மந்திரிகள், மாவட்டச் செயலாளர்கள் முதற்கொண்டு அனைவரின் பதவியும் பறி போய் இருக்குமே.

பொதுத்தேர்தல் முடிவையே அம்மா மன்னிக்க மாட்டார்கள். இடைத்தேர்தல் முடிவை அம்மா அவர்கள் ஏற்பார்களா? இன்று நம்முடைய அம்மாவை ‘ஃபாலோ’ செய்து கருணாநிதிக் கட்சியில் அப்படிப்பட்ட முடிவை எடுத்திருக்கிறார்களே? தொகுதியின் மொத்த நிர்வாகிகளையும் கூண்டோடு நீக்கி உள்ளார்களே. ‘அணிகள் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை’ என்று சகோதரர் மைத்ரேயன் பதிவு போட்ட போது அனைவருமே ஒரே குரலில் மறுத்தீர்களே. உண்மையைச் சொல்லுங்கள், நம் மனங்கள் இணைந்துதான் இருக்கிறதா?

இன்றும் ஓ.பி.எஸ். அணியிலிருந்து வந்தவர்களுக்குக் கட்சியில் எந்த முக்கியப் பொறுப்பும் கொடுக்கப்படாமல் இருக்கிறதே, வடசென்னை மாவட்டம் உள்பட தமிழ்நாடு முழுவதும் அதுதானே உண்மை நிலவரம். இதை காலங்கடந்து போய் இனிமேல்தான் சரி செய்யப் போகிறீர்களா மிஸ்டர் முதல்வர் அவர்களே?

கழக இணை ஒருங்கிணைப்பாளர் அவர்களே ? நம்முடைய இயக்கம் விழுதுகளைத் தாங்கி நிற்கும் பேரியக்கம் என்று என்னைப் போல் பலர் உறுதியாக நம்பிக்கொண்டிருக்கிறோம். வேரிலும், விழுதிலும் கந்தகத்தை ஊற்றிவிட்டு ‘கழகமரம்’ கண்டிப்பாக நிழல் தரும் என்று சொல்வது போல்தானே இச்சம்பவங்கள் காட்டுகின்றன.

எனக்கு திருப்தியைத் தரக் கூடிய அளவில் உங்கள் பதில் இல்லையென்றால் ‘தன்னிச்சை’ யாக நானே, கட்சியில் சில முடிவுகளை மேற்கொள்ள வேண்டிவரும்…” இவ்வாறு அந்தக் கடிதத்தில் மதுசூதனன் எழுதியிருப்பதாகக் கூறப்படுகிறது போகிறது.

இதுபோக, கடிதத்தின் முடிவில் 14 கேள்விகளை எடப்பாடி பழனிசாமிக்கு அவர் முன்வைத்திருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே மைத்ரேயன் தனது முகநூல் பதிவு மூலமாக கிளப்பிய ‘புரட்சி’யின் அடுத்தகட்டமாகவே மதுசூதனனின் பூகம்ப அறிக்கையை பலரும் பார்க்கிறார்கள்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆரம்பத்தில் சசிகலா ஆதரவு நிலை எடுத்திருந்த மதுசூதனன், ஓ.பன்னீர்செல்வத்தின் ‘தர்மயுத்தம்’ தொடங்கியதும் அவருக்கு ஆதரவாக மாறியவர் ஆவார். மதுசூதனன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பியபோதே, அமைச்சர் ஜெயகுமார் தரப்பில் முன்னாள் எம்.பி. பாலகங்காவை நிறுத்த காய் நகர்த்தியதாக தகவல்கள் வெளிவந்தன. காரணம், மதுசூதனனுக்கும் ஜெயகுமாருக்கும் இடையிலான போட்டி அரசியல் வட சென்னையில் மிக பிரபலம்!

அதையும் மீறி, இரட்டை இலை சின்னத்தை தனது பெயரில் பெற்றவர் என்ற அடிப்படையில் முன்னுரிமை பெற்று ஆர்.கே.நகர் வேட்பாளராக களம் இறங்கினார் மதுசூதனன். அங்கு கிடைத்த தோல்வி அவரை கொந்தளிக்க வைத்திருக்கிறது. எனவேதான் ஜெயகுமார், வெங்கடேஷ்பாபு ஆகியோர் மீது நடவடிக்கையை வலியுறுத்துகிறார் அவர்.

அமைச்சர் ஜெயகுமார், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வலதுகரமாக பார்க்கப்படுகிறார். ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்திற்கும்கூட நிதி அமைச்சருக்கு (ஓ.பன்னீர்செல்வம்) பதிலாக முன்னாள் நிதி அமைச்சர் என்ற அடிப்படையில் ஜெயகுமாரையே டெல்லிக்கு அனுப்பி வைத்தார் எடப்பாடி பழனிசாமி. தவிர, டிடிவி தினகரனுக்கு எதிராக இபிஎஸ் அணியில் வேறு யாரையும்விட தடாலடியாக பேட்டிகளை கொடுத்து வருபவர் ஜெயகுமார். எனவே மதுசூதனன் கடிதம் அடிப்படையில் ஜெயகுமார் மீது நடவடிக்கை எடுக்க இபிஎஸ் ஒருபோதும் தயாராக மாட்டார்.

தவிர, அதிமுக.வின் இன்றைய சூழலில் யார் மீதும் நடவடிக்கை எடுக்கும் சூழலும் அங்கு இல்லை. காரணம், இங்கிருந்து டிடிவி தினகரன் பக்கம் நிர்வாகிகள் தாவாமல் தடுப்பதே இப்போதைக்கு இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்புக்கு சவாலாக இருக்கிறது. எனவே மதுசூதனனின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்கிற பரபரப்பு எழுந்திருக்கிறது.

மதுசூதனனிடம் இது குறித்து இன்று (10-ம் தேதி) செய்தியாளர்கள் கேட்டபோது, ‘நான் கடிதம் எழுதினேனா, இல்லையா என்பது இபிஎஸ்.ஸுக்கும், ஓபிஎஸ்.ஸுக்கும் தெரியும். அது உட்கட்சி விவகாரம். அது குறித்து மீடியாவிடம் பேச முடியாது’ என்றார். அமைச்சர் ஜெயகுமார் இது தொடர்பாக மாலையில் விளக்கம் தெரிவிப்பதாக கூறியிருக்கிறார்.

இதற்கிடையே இதில் நடவடிக்கை எடுக்கப்படாத சூழலில், டிடிவி தினகரன் பக்கம் செல்லும் முடிவையும் மதுசூதனன் எடுக்கத் தயங்கமாட்டார் என்பதாக அவரது ஆதரவாளர்களில் சிலர் கூறி வருகின்றனர். ஆனால் அவர்களில் இன்னொரு தரப்பினர், ‘எப்படி ஜெயகுமாருக்கும் மதுசூதனனுக்கும் ஒத்து வராதோ, அதேபோல டிடிவி அணியில் உள்ள வெற்றிவேலுக்கும் மதுசூதனனுக்கும் பிடிக்காது. எனவே ஓபிஎஸ்-இபிஎஸ் அணியில் உள்ளிருந்தே புரட்சிக் குரல் எழுப்பிக் கொண்டிருப்பார் மதுசூதனன்.’ என்கிறார்கள் அவர்கள்.

மதுசூதனனை சமரசம் செய்யும் விதமாக அவருக்கு, சிவப்பு விளக்கு காரில் செல்லும் அளவிலான அரசுப் பதவி ஒன்றை வழங்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பிலிருந்து அழுத்தம் ஆரம்பித்துவிட்டதாகவும் தகவல்கள் கசிகின்றன.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Madhusudhanan letter to eps ops

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X