Advertisment

தமிழகத்தில் அதிகரிக்கும்  ‘மெட்ராஸ் ஐ’; பள்ளிகளில் கண் பரிசோதனைக்கு உத்தரவு - அமைச்சர் மா.சு

தமிழகத்தில் ‘மெட்ராஸ் ஐ’ எனப்படும் கண் ஒவ்வாமை நோய் அதிகரித்துள்ளதையடுத்து, மாநகரங்களில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
Ma Sub

தமிழகத்தில் அதிகரிக்கும் ‘மெட்ராஸ் ஐ’; பள்ளிகளில் கண்பரிசோதனைக்கு உத்தரவு - அமைச்சர் மா. சுப்பிரமணியன்

  

தமிழகத்தில் சென்னை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாநகரங்களில் ‘மெட்ராஸ் ஐ’ எனப்படும் கண் ஒவ்வாமை நோய் அதிகரிக்கத்துவங்கியிருக்கின்றது. இதனையடுத்து மாநகரங்களில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

   

சென்னை, எழும்பூர் மண்டல கண் மருத்துவ இயல் நிலையம் மற்றும் அரசு கண் மருத்துவமனையில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணின் ஆய்வு மேற்கொண்டு நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். 

   

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர் தெரிவித்ததாவது;  ‘மெட்ராஸ் ஐ’ என்று அழைக்கப்படும் கண் வெண்படல அழற்சி நோய், சென்னை உள்பட பெருநகரங்களில் சற்று அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. சென்னையில் மட்டுமல்ல டெல்லியில் நடைபெற்றுள்ள கூட்டத்தில் கூட இதுகுறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. 

   

மேலும், குஜராத், மகாராஷ்டிரா மற்றும் வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலயா, திரிபுரா, மிசோரம், மணிப்பூர் போன்ற பல்வேறு மாநிலங்களில் கூட இந்நோய் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் வடகிழக்கு பருவழை வருவதற்கு முன்னால் இந்நோய் பாதிப்பு என்பது கூடுதலாகி கொண்டு இருக்கிறது.

   

ஆகையால், இந்நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களை பாதுகாக்கின்ற வகையில் அவர்களுக்கு இந்நோய் பாதிப்புகளிலிருந்து அவர்களை மீட்டெடுக்கின்ற வகையில் இம்மருத்துவமனையில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. 

   

தமிழக அரசினைப் பொறுத்தவரை, தமிழக முதல்வர் எடுத்த விழிப்புணர்வு நடவடிக்கைகளின் காரணமாக தினந்தோறும் இந்தாண்டு நாள் ஒன்றுக்கு 100-க்கும் குறைவானவர்களே இந்நோய் பாதிப்பு அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு வருகிறார்கள்.

    

கடந்த காலங்களில் வடகிழக்கு பருவமழை வருகின்றபோது பருவமழைகளுக்கு முன்னால் இதுபோன்ற பாதிப்புகள் என்பது தினந்தோறும் பல நூறுகளைத் தாண்டும். ஆனால் தற்போது தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி எடுக்கப்பட்டு வரும் விழிப்புணர்வு நடவடிக்கைகளின் காரணமாக நூற்றுக்கும் குறைவானவர்களே இந்நோய் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். 

    

சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் ‘மெட்ராஸ் ஐ’-க்கு என்று தனியாக வார்டு இருக்கிறது. அந்த வார்டிலும் தற்போது ஆய்வு செய்தோம். அதில் 5 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Advertisment

Madras eye

இந்த நோய் முதன்முதலில் 1918-ம் ஆண்டு சென்னையில் முதலில் கண்டறியப்பட்டதால்  ‘மெட்ராஸ் ஐ’ என்று அழைக்கப்படுகிறது. இதன் அறிகுறிகளாக கண் வலி மற்றும் கண் சிவந்து போகுதல், கண்களில் நீர் வழிதல், கண்களில் எரிச்சல் மற்றும் அரிப்பு ஏற்படுதல், கண்களில் அழுக்கு வெளியேறி இமைப்பகுதிகள் ஒட்டிக் கொள்ளுதல், கண்களில் தூசி அல்லது வேறு வெளிப்பொருள் உள்ளது போன்ற உணர்வு ஏற்படுதல், இது பருவநிலை மாறுபாட்டினாலும் ஒரு விதமான வைரஸ் மற்றும் பாக்டீரியவால் வரக்கூடியது. இங்கு இருக்கின்ற ஆய்வக நுட்புநர்கள் ஆய்வு செய்ததால் இதுவரை 14 பேருக்கு Entro Virus, Adino Virus என்று சொல்லக்கூடிய இரு வகையான வைரஸ்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    

எனவே, ‘மெட்ராஸ் ஐ’ பாதிப்புக்கு உள்ளானவர்கள் ஒருவரை ஒருவர் நேடியாக பார்ப்பதினால் வராது, குடும்பத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டால் மற்றவருக்கு பரவும் வாய்ப்பு உள்ளது. அதனால் பாதிப்பு ஏற்பட்டவர்கள் உபயோகிக்கும் பொருட்கள் அல்லது கருவிகளை மற்றவர்கள் உபயோகிக்கக்கூடாது. கண் நோய் பாதித்தவர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களுக்கு செல்லும்போது மிக எளிதாக பரவக்கூடியது. இது ஒரு வாரம் அல்லது இரண்டு வாரம் மட்டுமே இருக்கும்.

    

இந்நோயினால் பாதிக்கப்பட்டால் செய்ய வேண்டியவை. கண்கள் மற்றும் கைகளை நல்ல நீரினால் அடிக்கடி கழுவ வேண்டும். கண்களுக்கு நல்ல ஓய்வு கொடுக்க வேண்டும். கண் மருத்துவரின் ஆலோசனைகளை பெற்று சொட்டு மருந்துகளை உபயோகிக்க வேண்டும். சுயமாக மருந்துகளை பயன்படுத்தக்கூடாது. பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

   

தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய திசு காகிதம் மற்றும் கைக்குட்டையை மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது. கண் நோய் சரியாகும் வரை அனைவரிடமிருந்து சற்று விலகி இருக்க வேண்டும். கண்ணுக்கு யார் மருந்து போடுகிறார்களோ அவர்கள் மருந்து போடும் முன், மருந்து போட்ட பின் கைகளைச் சுத்தமாகக் கழுவிக் கொள்ள வேண்டும். நல்ல ஆரோக்கியமான நீர்ச்சத்து மிகுந்த வைட்டமின் ஏ மற்றும் சி சத்துள்ள உணவு, உறக்கம், கண்ணுக்கு ஓய்வு போன்றவை நோய்ப் பாதிப்பிலிருந்து விரைவில் குணமடைய வைக்கும். எனவே பொதுமக்கள் இந்த வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

   

‘மெட்ராஸ் ஐ’ குறித்து மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வு தேவைப்படுவதால் சென்னையைப் பொறுத்தவரை மாநகராட்சிப்பள்ளிகள், தனியார் பள்ளிகள், அரசுப் பள்ளிகள், அரசு நிதியுதவி பெரும் பள்ளிகள் என்று ஏறத்தாழு 12 லட்சம் மாணவ, மாணவியர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். முதல் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை 12 லட்சம் மாணவர்கள் பயின்று வருகிறார்கள். எனவே இந்த 12 லட்சம் மாணவர்களுக்கும் வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கு முன்பாகவே இந்த மாதம் கண் பரிசோதனை செய்யலாம் என்று தமிழக முதல்வர் அறிவுறுத்தியிருக்கிறார்.

   

அந்த வகையில் வருகின்ற 16.09.2023 முதல் 25.09.2023 வரை 10 நாட்களுக்கு தொடர்ச்சியான அனைத்து பள்ளிகளிலும் நம்மிடம் இருக்கின்ற 400க்கும் மேற்பட்ட கண் மருத்துவர்கள் மட்டுமல்லாமல் தனியார் மருத்துவமனைகளைச் சேர்ந்த கண் மருத்துவர்களையும் கொண்டும், அரிமா சங்கம், லயன்ஸ் கிளப் மற்றும் ரோட்டரி கிளப் அமைப்பில் உள்ள மருத்துவர்களை கொண்டும் கண் மருத்துவ உதவியாளர்களையும் கொண்டும் 12 லட்சம் மாணவர்களுக்கு கண் பரிசோதனை செய்வது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

   

தமிழகத்தில் சென்னை, திருச்சி உள்பட பல்வேறு பெருநகரங்களில் தற்போது பரவலாக  'மெட்ராஸ் ஐ' பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

செய்தி: க. சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ma Subramanian
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment