ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி, ஓ.பன்னீர்செல்வம், வைரமுத்து ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும், அதிமுகவில் ஜூன் 23ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்றும் இடைகால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்றும் தனி நீதிபதி தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.
பொதுக்குழு மற்றும் செயற்குழுவை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் சேர்ந்து கூட்ட வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், தனி நீதிபதி ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்தார். அதில், தனி நீதிபதி உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல் மேல்முறையீடு மனு பட்டியலிடும்படி கூடுதல் மனுத்தாக்கல் செய்திருந்தார். எடப்பாடி பழனிசாமியின் கூடுதல் மனுவும், ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த கேவியட் மனுவும் நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில் நேற்று (ஆகஸ்ட் 22) விசாரணைக்கு வந்தது.
அப்போது, இபிஎஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன் தனி நீதிபதியின் சான்றளிக்கப்பட்ட உத்தரவு நகல் இல்லாமல் மனுவை விசாரணைக்கு ஏற்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதனை ஏற்று தனி நீதிபதியின் சான்றளிக்கப்பட்ட உத்தரவு நகல் இல்லாமல் மேல்முறையீடு மனுக்களை விசாரணைக்கு பட்டியலிடும்படி பதிவுத்துறைக்கு உத்தரவிட்டனர்.
இந்தநிலையில் இன்று (ஆகஸ்ட் 23) நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் டெல்லியில் இருந்து மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ண குமார் ஆஜராக இருப்பதால் விசாரணையை வியாழக்கிழமைக்கு தள்ளிவைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். இதனை ஏற்ற நீதிபதிகள் விசாரணையை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil