/indian-express-tamil/media/media_files/hRkHAjdu15oYxriRZdss.jpg)
'ஓசூரில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவம் தொழில் ரீதியாக அல்ல, தனிப்பட்ட காரணங்களுக்காக நடந்துள்ளது. ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பு அழிப்பது இயலாத காரியம்' என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
ஓசூர் சம்பவத்தின் எதிரொலியாக, தமிழகத்தில் வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை தடுக்கவும், மாவட்ட நீதிமன்றங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது உள்ளிட்டவை தொடர்பாக உள்துறை செயலாளர் மற்றும் டி.ஜி.பி-யுடன் ஆலோசனை நடத்தி பரிந்துரைகளை அளிக்க தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒசூரில் வழக்கறிஞர் கண்ணன் என்பவர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து, வழக்கறிஞர்கள் மீதான தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் ஆஜராகி, “தவறிழைக்கும் வழக்கறிஞர்கள் மீது பார் கவுன்சில் சார்பில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், தமிழகத்தில் வழக்கறிஞர்கள் கொலை செய்யப்படுவது மற்றும் தாக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது. இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்களில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்,” என்று அவர் கோரிக்கை வைத்தார்.
இதன் பின்னர் வழக்கை விசாரித்த நீதிபதிகள், “வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை தொடங்கிவிட்டதா? கைது நடவடிக்கை ஏதேனும் மேற்கொள்ளப்பட்டதா?” என கேள்வி எழுப்பினர். மேலும், “இச்சம்பவம் தனிப்பட்ட காரணங்களுக்காக நடந்துள்ள நிலையில், ஒவ்வொரு நபருக்கும் பாதுகாப்பு அளிப்பது இயலாத காரியம்.
வழக்கறிஞர்கள் மீதான தொடர் தாக்குதல் சம்பவங்களை தடுக்க, மாவட்ட நீதிமன்றங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது உள்ளிட்டவை குறித்து உள்துறைச் செயலர் மற்றும் டிஜிபியுடன் ஆலோசனை நடத்தி பரிந்துரைகளை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அளிக்க வேண்டும்,” என உத்தரவிட்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.