/tamil-ie/media/media_files/uploads/2022/02/collage-13.jpg)
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் விஷால் தலைமையிலான அணி 2015 ம் ஆண்டு வெற்றி பெற்ற நிலையில், 2018 ஆம் ஆண்டு அக்டோபருடன் பதவிகாலம் முடிவடைந்தது. இதையடுத்து, செயற்குழு ஒப்புதலுடன் பதவிகாலம் 6 மாதம் நீட்டிக்கப்பட்டது.
பின்னர், 2019 ஆம் ஆண்டு ஜூன் 23ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான தேர்தல் நடத்தப்பட்டது. ஆனால், முறையான வாக்காளர் பட்டியலை தயாரித்து நியாயமாக தேர்தல் நடத்த குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது.
இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவின்பேரில், வாக்கு எண்ணிக்கை நடத்தப்படாமல், வாக்குப்பெட்டிகள் வங்கி லாக்கரில் வைக்கப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து, தொடர்ந்து நடிகர் சங்கத்துக்கு நடத்தப்பட்ட தேர்தலை ரத்து செய்ய கோரி நடிகர் ஏழுமலை மற்றும் பெஞ்சமின் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.
அனைத்து வழக்குகளையும் ஒன்றாக விசாரித்த தனி நீதிபதி கல்யாண சுந்தரம், தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார். மீண்டும் தேர்தல் நடத்தப்படும் வரை சங்க நிர்வாகத்தை அரசு நியமித்த தனி அதிகாரி தொடர்ந்து கவனிக்க வேண்டும் என தெரிவித்தார்.
தனிநீதிபதியின் உத்தரவை எதிர்த்து விஷால், நாசர், கார்த்தி ஆகியோர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி வந்த உயர் நீதிமன்றம், இன்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு கூறியதாவது, " 2019-ம் ஆண்டு ஜூன் 23-ல் நடந்த நடிகர் சங்க தேர்தல் செல்லும். மறுதேர்தல் நடத்த தேவையில்லை.
நடிகர் சங்க தேர்தல் செல்லாது என அறிவித்திருந்த தனிநீதிபதி உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. ஏற்கனவே பதிவான வாக்குகளை 4 வாரத்திற்குள் எண்ணி முடிக்க வேண்டும்" என தீர்ப்பளித்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.