செம்மண் குவாரிகளில் அதிக அளவு மண் எடுத்து அரசு இழப்பு ஏற்படுத்தியதாக பதிவான வழக்கில், அமைச்சர் பொன்முடி தன்னை விடுவிக்க கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006-11 திமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த பொன்முடியின் மகன் கெளதம சிகாமணி மற்றும் உறவினர்கள் செம்மண் குவாரிகளில் சட்டவிரோதமாக அளவுக்கு அதிகமாக மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு ரூ.37 லட்சத்திற்கும் மேலான அளவிற்கு இழப்பு ஏற்படுத்தியதாக, அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கெளதம சிகாமணி மற்றும் உறவினர் ஜெயச்சந்திரன் உள்ளிடோர் மீது விழுப்புரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையும் படியுங்கள்: இன்னொருவருக்கு தீ வைக்க முயன்று தனக்கு தானே தீ வைத்துக் கொண்ட வியாபாரி; திருச்சியில் பரிதாபம்
இந்த வழக்கு எம்.பி., எம்.எல்.ஏ.,க்களின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி அமைச்சர் பொன்முடி, சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். ஆனால் சிறப்பு நீதிமன்றம் பொன்முடி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனையடுத்து பொன்முடி, இந்த உத்தரவை ரத்து செய்து தன்னை விடுவிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி நிர்மல்குமார், வழக்கில் காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள் போன்றவைகளில் இருந்து மனுதாரருக்கு எதிராக வழக்கை தொடர்ந்து நடத்த ஆதாரங்கள் உள்ளதாகக் கோரி, அமைச்சர் பொன்முடியை வழக்கில் இருந்து விடுவிக்க மறுத்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil