Madras HC dismiss Sattai Duraimurugan arrest on Goonda act: யூடியூபர் சாட்டை துரைமுருகனை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு அறிவுரை வழங்கியுள்ளது.
பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாகவும், வன்முறையை தூண்டும் விதமாகவும் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டதாக யூடியூபர் சாட்டை துரைமுருகன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சாட்டை துரைமுருகனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க, கடந்த ஜனவரி 2 ஆம் தேதி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.
இதையும் படியுங்கள்: ஐ.டி ரெய்டில் சிக்கிய அரசு காண்ட்ராக்டர்கள்: ரூ500 கோடி சொத்து கண்டுபிடிப்பு
இந்த உத்தரவை ரத்துச்செய்யகோரி துரைமுருகனின் மனைவி மாதரசி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தப்போது, குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரிய விண்ணப்பத்தினை பரிசீலிக்க 17 நாட்கள் காலதாமதம் ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, துரைமுருகன் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை நீதிபதிகள் ரத்து செய்தனர்.
அதேநேரம், பேச்சுரிமை என்பது அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை தான், ஆனால் அதற்கும் ஓர் எல்லை உண்டு, மனுதாரர் துரைமுருகன் எல்லை மீறாமல் இருக்க வேண்டும் என நீதிபதிகள் துரைமுருகனுக்கு அறிவுரை வழங்கினர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil