கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய 27ம் தேதி வரை தடை!

சிறப்பு நீதிமன்றத்தில் இன்று நடைபெறும் குற்றச்சாட்டு பதிவுக்கு 27 ஆம் தேதி வரை இடைக் கால தடை விதித்து உத்தரவு

Madras HC grants interim stay on proceedings against Karti Chidambaram : வருமானத்தை மறைத்தாக வருமான வரி பதிவு செய்த வழக்கில் கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோர்க்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் ஜனவரி 27 ஆம் தேதி வரை குற்றச்சாட்டு பதிவு செய்ய இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், காங்கிரஸ் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகிய இருவரும், பழைய மாமல்லபுரம் சாலையில் முட்டுக்காட்டில் உள்ள தங்களுக்கு சொந்தமான சொத்துகளை கடந்த 2015-ம் ஆண்டு அக்னி எஸ்டேட்ஸ் பவுன்டேசன் என்ற நிறுவனத்துக்கு விற்பனை செய்துள்ளனர்.

இந்த விற்பனை மூலம் பெற்ற 7 கோடியே 73 லட்சம் ரூபாயை வருமான வரி கணக்கில் காட்டாமல் மறைத்ததாக, கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோர் மீது வருமான வரித்துறை 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது.  இந்த வழக்கு முதலில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பின்னர் எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க கோரி கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்த சிறப்பு நீதிமன்றம், குற்றச்சாட்டுக்கள் பதிவுக்காக ஜனவரி 21 ( இன்று) நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், தங்களுக்கு எதிரான இந்த வழக்கை, சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியதை எதிர்த்து, கார்த்தி சிதம்பரமும், ஸ்ரீநிதியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.  அந்த மனுவில், சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்கவும் கோரியிருந்தனர்.

இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கார்த்திக் சிதம்பரம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிறப்பு நீதிமன்றத்தில் இன்று நடைபெறும் குற்றச்சாட்டு பதிவுக்கு தடை விதிக்க வேண்டும் இந்த வழக்கில் தங்கள் தரப்பில் விரிவான வாதங்களை வைக்க கால அவகாசம் அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

வருமானவரித் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இன்று நடைபெறும் குற்றச்சாட்டு பதிவுக்கு தடை விதிக்க கூடாது. எம்.பி, எம்.எல்.ஏ களுக்கு எதிரான வழக்குகளை தினந்தோறும் விசாரணை நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது எனவே சிறப்பு நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க கூடாது என வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு உத்தரவிட்ட நீதிபதி சுந்தர், சிறப்பு நீதிமன்றத்தில் இன்று நடைபெறும் குற்றச்சாட்டு பதிவுக்கு 27 ஆம் தேதி வரை இடைக் கால தடை விதித்து உத்தரவிட்டு விசாரணை 27 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

மேலும் படிக்க : இந்திய பொருளாதாரம் குறித்து ஐ.எம்.எஃப் கணிப்பு… மத்திய அரசை சாடிய சிதம்பரம்!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Tamilnadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close