சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜியை, மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யும் முடிவுக்கு சென்னையை சேர்ந்த 237 வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அவரது பணியிட மாற்றம் உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்ற கொலிஜியத்தில் அங்கம் வகிக்கும் தலைமை நீதிபதி என்.வி.ரமணா உள்ளிட்ட ஐந்து நீதிபதிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
இதுதொடர்பாக அனுப்பப்பட்ட கடித்ததில், சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி பதவியேற்று 10 மாதங்கள் கடந்துள்ள நிலையில், அவரது மாற்றம் என்பது பொதுநலன் அடிப்படையிலா அல்லது சிறந்த நீதி பரிபாலனத்துக்கா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
சிறந்த நீதி நிர்வாகத்திற்கான இடமாற்றங்கள் கொள்கையளவில் அவசியமானதாக இருந்தாலும், இந்த ஆண்டு 35,000 க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்ட ஒரு பெரிய உயர் நீதிமன்றத்தின் துணிச்சல் மிக்க, சிறந்த ஆளுமை மிகுந்த ஒரு தலைமை நீதிபதியை சிறிய உயர்நீதிமன்றத்துக்கு பணியிடம் மாற்றும்போது அதன் நோக்கத்தை அறிய நீதித்துறையின் அங்கமான வழக்கறிஞர்களுக்கு உரிமை உள்ளது.
எந்த பாகுபாடும் இல்லாமல் துணிச்சலாக செயல்படும் நீதிபதியை முக்கியத்துவம் இல்லாத இடத்துக்கு மாற்றுவது என்பது அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட காலத்தில் நடந்தது எனவும், இந்த மாற்றம் என்பது நீதிபதியின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

75 நீதிபதிகளை கொண்ட சார்ட்டர்டு உயர் நீதிமன்றமான, சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து, 2013ம் ஆண்டு துவங்கப்பட்டு, இரு நீதிபதிகள் மட்டுமே உள்ள மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜியை மாற்றுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என கேள்வி எழுப்புகின்றனர்.
தலைமை நீதிபதி பானர்ஜி அரசியலமைப்பு உரிமைகள், பேச்சு சுதந்திரம், மதச்சார்பின்மை, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள், சுகாதார உரிமை மற்றும் மாநில பொறுப்புக்கூறல் ஆகியவற்றின் மதிப்புகளை நிலைநிறுத்தும் பல உத்தரவுகளை நிறைவேற்றியுள்ளார். இதன் காரணமாக, அதிகாரத்தில் இருப்பவர்களின் கோபத்தை அவர் சம்பாதித்திருக்கலாம்.
கொலிஜியம் செப்.16ல் எடுத்த முடிவை நவம்பர் மாதத்தில் அறிவித்தது குறித்தும் கடிதத்தில் வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
எனவே, தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி அவர்களின் பணியிடமாற்றத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil