chennai-high-court | neet | dmk: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டு மக்களின் மனநிலையை மத்திய அரசுக்கு உணர்த்தும் வகையில், தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் முன்னெடுப்பில், தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் "நீட் விலக்கு, நம் இலக்கு" எனும் மாபெரும் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதனை கடந்த 21ம் தேதி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தொடக்கி வைத்து முதல் கையெழுத்திட்டார்.
இந்நிலையில், தி.மு.க.-வின் கையெழுத்து இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து வழக்கறிஞரும் தேசிய மக்கள் கட்சியின் தலைவருமான எம்.எல்.ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் அவர், “தி.மு.க மேற்கொள்ளும் கையெழுத்து இயக்கத்தில், மாணவர்களிடம் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கப்படுகிறது. இது சட்ட விரோதம், எனவே, இதற்கு தடை விதிக்க வேண்டும். இது தொடர்பாக அரசும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை” என்று தெரிவித்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதியின் அமர்வின் போது இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தின் மூலம் மனுதாரர் எப்படி பாதிக்கப்படுகிறார்? நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு ஏதேனும் முடிவெடுத்து அது மாணவர் நலனுக்கு விரோதமாக அமைந்தால் பொது நல வழக்காக தொடரலாம்.
நீட் தேர்வை எதிர்க்க கட்சிகளுக்கு உரிமை உள்ளது. அரசியல் கட்சிகளுக்கு ஒரு விஷயத்தில் எதிர்ப்பு தெரிவிக்க உரிமை இருந்தாலும், இதுபோன்ற பொது நல வழக்குகளை தாக்கல் செய்வதற்கு வரம்பு இருக்கிறது. மனுதாரரின் நோக்கத்தை நிரூபிக்கும் வகையில் ஒரு லட்ச ரூபாயை டெபாசிட் செய்தால் வழக்கை விசாரிக்கிறோம்” என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வழக்கை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். இதனையடுத்து, வழக்கை முடித்துவைத்து நீதிபதிகள் “சமுதாயத்திற்கு நலன்பயக்கும் விஷயமாக இருந்தால் அது தொடர்பாக பொது நல வழக்கு தாக்கல் செய்யலாம்” என்று உத்தரவிட்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“